விளையாட்டுத்துறையில் தமிழகம் தலைமையகமாக திகழ்ந்து வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் ரூ. 75.95 கோடி மதிப்பிலான 17 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு ரூ. 128.92 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கிராமப்புற மாணவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் அளவிற்கு தமிழக அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டுக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதால் பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று அதிக அளவில் பதக்கங்களை பெற்று வருகிறது. எனவேதான், விளையாட்டுத்துறையில் தமிழகம் தலைமையகமாக திகழ்ந்து வருகிறது. பல்வேறு சர்வதேச போட்டிகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 44 ஆவது செஸ் போட்டி, ஃபார்முலா கார்பந்தயம், பீச் வாலிபால், ஆகிய போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதிக்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை அமைக்கப்பட்டு அதன் மூலம் பல உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. விளையாட்டுத் துறையில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, காலை உணவுத் திட்டம், மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உள்பட அரசு அதிகாரிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.