கட்சிக்கு தலைமை யார்? திருமாவிடம் அண்ணாமலை கேள்வி!
விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையின்மை குறித்து அண்ணாமலை விமர்சனம்
தமிழ்நாடுகட்சிக்கு தலைமை யார்? திருமாவிடம் அண்ணாமலை கேள்வி!
விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையின்மை குறித்து அண்ணாமலை விமர்சனம்
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை யார் கையில் உள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் (டிச. 6) மணிப்பூர் குறித்து விஜய் பேசிய நிலையில், இதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, ``அம்பேத்கருடைய புத்தகத்தை வெளியிடவும் தொகுப்பதற்கும் இந்தியாவில் உங்களுக்கு ஆளே கிடைக்கவில்லையா? இந்த நிகழ்ச்சிக்கு போகமாட்டேன் என்று கூறி, தொல். திருமாவளவன் விலகி விட்டார். ஆனால், அவரது கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்றிருக்கிறார்.
அப்படியென்றால், கட்சி திருமாவளவனின் கையில் இருக்கிறதா? துணை பொதுச் செயலாளர் கையில் இருக்கிறதா? விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரு தலைவரா? இரண்டு தலைவர்களா? கூட்டணி கட்சி குறித்து மேடையில் பேசிய பின்பும், ஒரே கட்சியில் தலைவரும் துணை பொதுச் செயலாளரும் இருக்கிறார்கள். அப்படியென்றால், என்னைப் பொருத்தவரையில், திருமாவளவனின் கையில் கட்சி இல்லை; லாட்டரி விற்பனையாளரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா கையில்தான் உள்ளது.
மேடையில் கூட்டணி கட்சியை விமர்சித்தவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என்றால், அந்தக் கட்சியின் முக்கிய நன்கொடையாளர் மீது கைவைக்க திருமாவளவன் தயாராக இல்லை. இதன்மூலம், திமுக கூட்டணியின் நிலை தெரிகிறது. பணம், காசுக்காகத்தான் எல்லோரும் ஒட்டியிருக்கின்றனரா என்ற கேள்வியும் எழுகிறது. அம்பேத்கரை வைத்து எவ்வளவு அரசியல் வியாபாரம் நடைபெறுகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஓர் உதாரணம்.
இதையும் படிக்க: ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? திருமாவளவன் பதில்
மணிப்பூர் செல்வதற்கு விஜய் தயாராக இருந்தால், அவரோடு செல்ல நான் தயாராக இருக்கிறேன். மணிப்பூரைச் சுற்றிக் காட்டுவதற்கு நான் தயார். பொது அரசியலில் விஜய் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்தப் பிரச்னை ஏன் உருவானது? மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு பலி எண்ணிக்கை ஏற்பட்டது? கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எவ்வளவு பலி ஏற்பட்டுள்ளது? முதல்வரின் வீட்டை பழங்குடியினர் தீயிட்டுக் கொளுத்திய போதும், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை.
காங்கிரஸ் ஆட்சியின்போது, துப்பாக்கிச் சூட்டை எதிர்த்து பெண்கள் உடைகளில்லாமல் நிர்வாணமாக போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பாஜகதான் மணிப்பூரை மீட்டுள்ளது. 2015-ல் திரிபுராவில், 2018-ல் மேகாலயாவிலும், 2014-ல் அஸ்ஸாமில் 23 மாவட்டங்களில், 2022-ல் மணிப்பூரிலும் பாஜகவால் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.