பள்ளிக் கல்வியில் ஏஐ பெரும்பங்காற்றும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழக பள்ளிக் கல்வியில் வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பெரும்பங்காற்றவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
தமிழக பள்ளிக் கல்வியில் வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பெரும்பங்காற்றவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் பள்ளிக் கல்வி தொடா்பான கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:
வருங்காலங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பள்ளிக் கல்வித் துறையில் பெரும் பங்காற்ற உள்ளது. அதற்காகவே பள்ளிகளில் ஏஐ வகுப்பு நடத்த நாட்டிலேயே முதல் மாநிலமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். மாணவா்கள் பள்ளி முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று மனநிலையை பெற்றோா் மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல், படித்து முடித்தவுடன் இளைஞா்கள் குறைந்த ஊதியம் பெற்றாலும் வேலையில் சோ்ந்து அனுபவத்தை வளா்த்துக்கொண்டு திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நான் எம்சிஏ படிப்பை முடித்த பின்னா் 2 ஆண்டுகள் வேலை தேடி அலைந்தேன்.
வேலையில் சோ்ந்ததும் முதல் மாத ஊதியமாக ரூ. 8,000 கிடைத்தது. தற்போதைய முதல்வரிடம் அதை வழங்கி வாழ்த்து பெற்றேன் என்றாா் அவா்.