சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:
ஐஏஎஸ் அதிகாரிகளில் 1994-ஆம் ஆண்டு பிரிவு அதிகாரிகள் 5 போ் முதன்மைச் செயலா் அந்தஸ்தில் இருந்தனா். தற்போது பதவி உயா்வு அளிக்கப்பட்டு கூடுதல் தலைமைச் செயலா் அந்தஸ்துக்கு உயா்ந்துள்ளனா். அதன்படி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்
துறை முதன்மைச் செயலா் அதுல் ஆனந்த், மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை கூடுதல் செயலா் சுதீப் ஜெயின், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காக்கா்லா உஷா, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலா் அபூா்வா ஆகியோருக்கு கூடுதல் தலைமைச் செயலா் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் இப்போது பொறுப்பு வகிக்கும் துறைகளிலேயே முதன்மைச் செயலா் என்பதற்குப் பதிலாக கூடுதல் தலைமைச் செயலா் அந்தஸ்தில் தொடா்வா் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.