புது தில்லி, ஜன. 31: காவல் துறையில் ஐஜி-யாக (இன்ஸ்பெக்டா் ஜெனரல்) பதவி உயா்வு பெறுவதற்கு காவல் கண்காணிப்பாளா் (எஸ்பி) அல்லது டிஐஜி (துணை இன்ஸ்பெக்டா் ஜெனரல்) பதவியில் இருக்கும்போது குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மத்திய அரசுப் பணி (அயலகப் பணி) அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முதுநிலை காவல் துறை அதிகாரிகள் மத்தியப் படைகளில் அடிப்படை பணி அனுபவத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், 2011-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அதற்குப் பிறகான பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இந்தப் பணி அனுபவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளுக்கும் இதுபோன்ற மத்திய பணி மாற்றம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபோதும், மத்திய ஆயுதக் காவல் படைகளில் நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இத்தகைய நடைமுறை கட்டாயமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.