ஈரோடு: செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு, மனிதர்களால் செய்யப்பட்ட மிகப்பெரிய செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தியதே அதிமுக அரசுதான் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஃபெஞ்சால் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக செய்திருந்தோம், நிவாரணப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். மத்திய அரசின் நிதியை எதிர்பாராமல் மாநில அரசின் நிதியில் நிவாரணப் பணிகளை செய்கிறோம் என்றார்.
செம்பரம்பாக்கம் ஏரியை முன்னெச்சரிக்கை எதுவும் இன்றி திறந்துவிட்டு மேன் மேட் டிஸாஸ்டரை ஏற்படுத்தியது அதிமுக அரசுதான். அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு 23 லட்சம் வீடுகளை மூழ்கடித்தது அதிமுக. 200 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். புயல், வெள்ளம் எல்லாம் இயற்கைச் சீற்றம்தான், ஆனால் செம்பரம்பாக்கம் திறப்பு செயற்கைப் பேரிடர் என்று காட்டமாகக் கூறினார்.
எங்களைப் பார்த்து கத்திப் பேசும் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசைப் பார்த்து கீச்சுக் குரலில் கூட பேச முடியாத அளவில்தான் அதிமுக உள்ளது. வயிற்றெரிச்சலில் புலம்பிக்கொண்டே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. குற்றஞ்சாட்ட எதுவும் இல்லாததால் பொய் சொல்லக் கூடாது. சாத்தனூர் அணை தொடர்பாக இபிஎஸ் கூறியது இட்டுக்கட்டிய கற்பனைக் குற்றச்சாட்டு. காலி குடம் உருண்டால் சப்தம் அதிகமாகத்தான் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஆற்றிய உரையின் முழு விவரம், தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்றவர்களால், இந்த வெற்றிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை… அவர்களைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க. அரசு தொடர்ந்து திட்டங்களை அறிவிக்கிறார்களே, சொன்னபடி நிறைவேற்றுகிறார்களே, அதனால் அவர்களுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவும் கிடைக்குதே என்று வயிற்றெரிச்சல் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி புலம்பிக்கொண்டே இருக்கிறார்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஆளும்கட்சியை விமர்சிக்கலாம். தவறு கிடையாது. நியாயமான புகார்களாக இருந்தால் சொல்லலாம். ஆனால், தி.மு.க. ஆட்சி மேல் குற்றம் சாட்ட எதுவும் இல்லாமல், எதுவும் கிடைக்காமல் பொய் சொல்லக்கூடாது. பழனிசாமி என்ற தனிநபராக அவர் பொய் சொல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக சொல்கிறார். அது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
அண்மையில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மழைபொழிவு இருந்தது. தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து எதிர்கொண்டோம். பல இலட்சம் மக்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறோம். மழை தொடங்கியவுடன் துணை முதலமைச்சரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் களத்திற்கு அனுப்பினேன்.
மாவட்ட ஆட்சியர்களிடம் தொடர்ந்து நானே தொலைபேசியில் பேசினேன். மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு அடிக்கடி சென்று, அரசு செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினேன். அதுமட்டுமல்ல அதிக அளவில் பாதிப்புக்குள்ளான, விழுப்புரம் மாவட்டத்திற்கு நானே நேரில் சென்று உதவிகளை செய்தேன். இரவு பகல் பார்க்காமல், அரசு இயந்திரம் பணி செய்த காரணத்தினால், ஓரிரு நாட்களில் பாதிப்புகளில் இருந்து மக்களை நாங்கள் மீட்டோம். அதோடு, மழைக்கு பிறகு என்னென்ன பணிகள் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் துரிதமாக செய்து, நாங்கள் இன்று வரைக்கும் தொடர்ந்து செய்துக்கொண்டு இருக்கிறோம். நிவாரண தொகைகளை வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.
மத்திய அரசின் நிதி கூட வருகிறதா, வரவில்லையா என்பது பற்றியெல்லாம் காத்திருக்காமல், கவலைப்படாமல், மாநில அரசே உடனடியாக இது எல்லாவற்றையும் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், இட்டுக்கட்டிய கற்பனைக் குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் இன்றைக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார். சொல்கிறார்! முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டார்கள் என்று ஒரு பொய்யை பரப்பினார். ஆனால், உண்மை என்ன? ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கரைகளிலுள்ள கிராமங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அபாய எச்சரிக்கை அனுப்பப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததால்தான், பெரிய அளவில் உயிரிழப்புகளை நாங்கள் தவிர்த்திருக்கிறோம். இதுதான் உண்மை!
ஆனால், ஒன்றை மறந்துவிடக் கூடாது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிலைமை என்ன? செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்துவிட்ட காரணத்தினால், 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்தார்கள்! முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாமல் திடீரென்று ஏரியை திறந்து விட்ட காரணத்தினால், சென்னையில் 23 இலட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது… அப்போது இருந்த அமைச்சர்கள் யாரும் களத்திற்கு போகவில்லை! தன்னார்வலர்கள் தான் உதவி செய்தார்கள்! அதெல்லாம் மறக்க முடியாது. இல்லை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் நினைக்கிறாரா?
புயல், வெள்ளம், பூகம்பம் இதெல்லாம் இயற்கை சீற்றம்! ஆனால், செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு சென்னையை மூழ்கடித்தது, Man-Made Disaster! மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவு! இதை நான் சொல்லவில்லை, சி.ஏ.ஜி அறிக்கையிலேயே பதிவு செய்திருக்கிறார்கள்! அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்தார்கள்! இதையெல்லாம் மறைத்து, சாத்தனூர் அணையை வைத்து பழனிசாமி இன்றைக்கு பொய் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த பொய்யையும் சட்டமன்றத்தில் விரிவாக நாங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம். அதனால், உடனே அடுத்து டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை எடுத்துக்கொண்டார். நம்முடைய அரசு எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு முன்பே, சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், அந்த தீர்மானத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்ன பேசினார்? ஏலம் விட்ட மத்திய அரசை கண்டிக்காமல், நம்முடைய அரசை குறை சொல்லி பேசினார். அதற்குரிய பதில்களையெல்லாம், அமைச்சர்கள் தெளிவாக பதில் சொன்னார்கள்! அதை கேட்காமல் சொன்னதையே, திரும்ப திரும்ப சொன்னார். இந்த வாழைப்பழம் காமெடி தெரியும் அல்லவா, இந்த செந்தில்- கவுண்டமணி காமெடி. அது போன்று சட்டமன்றத்தில் திரும்ப திரும்ப சொன்னார். நான் அப்போது உறுதியோடு எழுந்துநின்று சொன்னேன். நான் முதலமைச்சராக இருக்கும் வரை, அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டேன்-என்று தெளிவாக சொல்லிவிட்டேன். அதையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.