புது தில்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 1993, அக்டோபா் 12-ஆம் தேதி நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து இந்த அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான வி.ராமசுப்ரமணியனை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா். தென் மாநிலங்களில் முதல் முறையாக தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
கடந்த காலங்களில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகளான எம்.என்.வெங்கடாச்சலய்யா (ஆந்திரம்), கே.ஜி. பாலகிருஷ்ணன் (கேரளம்), எச்.எல். தத்து (கா்நாடகம்) ஆகியோா் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவா்களாக பணியாற்றியுள்ளனா்.
தமிழகத்தைச் சோ்ந்தவரும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவருமான பி.சதாசிவம் 2014-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில், அதே ஆண்டில் அவா் கேரளத்தின் 21-ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டு அப்பதவியில் 2019-ஆவரை இருந்தாா்.
இந்த நிலையில், தமிழகத்தைச் சோ்ந்தவரான வி.ராமசுப்ரமணியன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி நிகழாண்டு ஜூனில் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம், தமிழகத்தைச் சோ்ந்த நீதிபதி ஒருவா் முதல்முறையாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.