முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் அறிவியல்

முனைவர் இளங்கோ கட்டிமுத்து இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அறிவியல் என்பது முன்னேற்றத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:12 PM
கோப்புப்படம்
பகிர்:

முனைவர் இளங்கோ கட்டிமுத்து இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அறிவியல் என்பது முன்னேற்றத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அறிவியல் ஆழமாகப் பதிந்துள்ளது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அறிவியல் சிந்தனையை மக்களிடையே வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் மனித முன்னேற்றத்தைக் கொண்டாடும் ஒரு சிறப்பான நிகழ்வாகும்.

தேசிய அறிவியல் தினத்தின் தோற்றம் உலகப் புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் சர் சி.வி. ராமனுடன் தொடர்புடையது. அவர் 1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி, ஒளியின் தன்மை குறித்த ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார். அது இயற்பியல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. குறைந்த வசதிகள் இருந்த காலத்திலும், இந்தியாவில் உயர் தரமான அறிவியல் ஆராய்ச்சி சாத்தியமானது என்பதை இது நிரூபித்தது. பின்னர், அவர் நோபல் பரிசைப் பெற்றது இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தது.

இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் அறிவியல், தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் (என்சிஎஸ்டிசி) என்ற அமைப்பு, பிப்ரவரி 28-ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு 1987 முதல் அதிகாரபூர்வமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

காலம் காலமாக வளர்ச்சி பெற்று வரும் அறிவியல், நமது வாழ்வில் பல வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளில் அறிவியல் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.

தேசிய அறிவியல் தினத்தின் முக்கிய நோக்கம் மக்களிடையே அறிவியல் மனப்பாங்கை உருவாக்குவதாகும். எதையும் ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து, கேள்வி எழுப்பி, தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் பழக்கமே அறிவியல் மனப்பாங்கு. அறிவியல் சிந்தனை வளரும்போது சமூகத்தில் விழிப்புணர்வு அதிகரிக்கும்; பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் மேம்படும்.

பள்ளிகள், கல்லூரிகள் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றன. மாணவர்கள் அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொண்டு புதுமையான மாதிரிகள், சோதனைகளை வெளியிடுகின்றனர். இது புத்தகங்களில் உள்ள தகவல்களை மட்டும் கற்றுக்கொள்வதைவிட, அனுபவத்தின் மூலம் புரிதலை அதிகரிக்க உதவுகிறது.

'மேம்படுத்தல்' என்பது அறிவியலின் மற்றொரு நோக்கமாகும். நாம் ஏற்கெனவே பயன்படுத்தும் ஒரு பொருளை மேலும் எவ்வாறு மக்களுக்குப் பயன்படும் வகையில் மேம்படுத்துவது என்ற சிந்தனையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டும்.

'பரவலாக்குதல்' என்பது அறிவியலின் மிக முக்கியமான அம்சமாகும். அனைவரும் பயன்படுத்தும் வகையில் மிகக் குறைந்த விலையில் உள்ள மூலப் பொருள்களைக் கொண்டு தயாரித்தலே மிகச் சிறந்த அறிவியல் செயல்பாடாக இருக்க முடியும். அப்போதுதான் சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் அது அமையும்.

ஆராய்தல், மேம்படுத்துதல், பரவலாக்குதல் என்ற மூன்று மனப்பான்மைகளையும் மாணவர்களிடம் உருவாக்கிய பிறகு, அவர்களுக்குக் கற்பிக்கப்படும் ஒவ்வோர் அறிவியல் பாடப் பொருளும் அவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும்.

உலகின் அறிவியல் வல்லரசுகளில் ஒன்றாக இந்தியாவும் வளர்ந்து வருகிறது. பிரம்மோஸ் ஏவுகணைகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களால் நமது விஞ்ஞானிகள் எப்போதும் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.

விண்வெளி மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் டாக்டர் அப்துல் கலாமின் பங்களிப்பு இந்தியாவை உலக அளவில் உயர்த்தியது. கடின உழைப்பும், ஆர்வமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவரது வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.

நிகழாண்டுக்கான அறிவியல் தினத்தின் கருப்பொருளாக "அறிவியலில் பெண்கள்; விக்சித் பாரதத்தை ஊக்குவித்தல்' என்பதாகும். அறிவியல் குறித்த விழிப்புணர்வை பெண்கள் பெறுவதும், நாட்டை வல்லரசாக உருவாக்கவும், புதுமைக்காக இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதும் முக்கிய நோக்கமாகும்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் சர் சி.வி. ராமன், எஸ்.என். போஸ், ஜே.சி. போஸ், மேக்நாத் சாஹா போன்ற இந்திய விஞ்ஞானிகள் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றினர். உலகத் தரம் வாய்ந்த பங்களிப்புகளை அளித்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு பண்டித ஜவாஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் அறிவியல் நிறுவனங்களை வலுவாக ஆதரித்தனர். இஸ்ரோ, டிஆர்டிஓ, சிஎஸ்ஐஆர், ஐசிஎம்ஆர் மற்றும் பல பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.

அதன் பலனாக அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றது. உணவு, மருத்துவம், போக்குவரத்து, சாலை மேம்பாடு, வாழ்விடம், தொலைத்தொடர்பு, விண்வெளி, செயற்கைக்கோள், உள்நாட்டு பாதுகாப்பு, மின்னணு தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் பெருக்கம் என நாட்டின் வளர்ச்சி சாத்தியப்பட்டது.

புதிய கண்டுபிடிப்புகள் தொழில்களை உருவாக்குகின்றன; வேலைவாய்ப்புகளை அதிகரிக்கின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில் நுட்பம் போன்ற துறைகள் எதிர்கால உலகை வடிவமைக்கின்றன.

ஆராய்ச்சி, கல்வியில் முதலீடு செய்வது ஒரு நாட்டின் எதிர்காலத்தை உறுதி செய்யும். மொழி, கலாசாரம், மதம் ஆகிய வேறுபாடுகளை மீறி மனிதகுலத்தை அறிவியல் ஒன்றிணைக்கிறது. உலகளாவிய சவால்களைச் சமாளிக்க நாடுகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது.

மனித அறிவின் சக்தியையும் ஆராய்ச்சி மனப்பாங்கையும் கொண்டாடும் ஓர் அரிய நாள் தேசிய அறிவியல் தினம். இது கடந்தகால விஞ்ஞானிகளின் சாதனைகளை நினைவுகூர்வதோடு மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையை புதுமையை நோக்கி வழிநடத்துகிறது. அறிவியலை மதித்து, அதை பொறுப்புடன் பயன்படுத்தும்போது, உலகம் மேலும் பாதுகாப்பானதாகவும் வளமானதாகவும் மாறும்.

இன்று (பிப்.28) தேசிய அறிவியல் தினம்

முழு கட்டுரையைப் படிக்க →