தமிழ்நாடு

'அரசியல் மற்றொரு தொழில் அல்ல; மக்கள் பணி': விஜய்

DIN

என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி என்று நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"'விஜய் மக்கள் இயக்கம்' பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.

எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிகாட்டி உதவுங்கள்

பிஞ்சுக் கை வண்ணம்!

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு 50-வது வெற்றி!

ஒளவைக்கு திருக்கோயில்!

விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT