உழவர்களைத் தடுக்க ஆணியைப் புதைக்கும் பாஜக: மு.க.ஸ்டாலின்
உழவர்களைத் தடுக்க சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பாஜக உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
உழவர்களைத் தடுக்க சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பாஜக உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
“வேளாண்மையை உணவுத் தேவைக்காக மட்டுமோ, அல்லது, அதனைத் தொழிலாக மட்டுமோ கருதுபவர்கள் அல்ல நாம். நமது தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்ததுதான் வேளாண்மையாகும். அதனால்தான் அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கடமை நமக்கு உண்டு.
மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல நிலத்துக்கும், மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த நம் முன்னோர் வழியில் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு அழுத்தமான சாட்சியமாக 2024 -25-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மண் வளம் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகளையும் ஊக்கப்படுத்திட ”முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” அமைந்துள்ளது. இராசயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணியிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளம் குறைந்து வருகிறது. எனவே மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. இரசாயன உரங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெற்பயிரில் இரசாயன மருந்துகளைக் குறைத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது 2400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை உயர்த்தப் போகிறது.
மரபுசார் நெல் இரகங்களை ஊக்குவிக்கப் போகிறோம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிவன் சம்பா நெல் ரகம் அதிகம் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கைச் சீற்றங்களால் உழவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து அவர்களை மீட்கப் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்தத் திட்டத்துக்கு மட்டும் 1,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ என்ற திட்டம் 15 ஆயிரத்து 280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
பத்து ஆண்டுகளாகப் பாசன மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்புகளை திமுக அரசு வழங்கி உள்ளது. இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் தில்லியில் தங்கிப் போராடினார்கள் உழவர்கள். அவர்களது எதிர்ப்பினால் பின்வாங்கியது பா.ஜ.க. அரசு. இப்போது மீண்டும் தில்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அவர்கள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் ஒன்றிய அரசு உள்ளது.
உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது. அதேநேரத்தில் உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாகத் தி.மு.க. அரசு உள்ளது.
இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறோம் என்பதை அனைவரும் அறியலாம்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.