முகப்பு
தமிழ்நாடு

மனிதவளத் தலைநகராக தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டை உலகின் மனிதவளத் தலைநகராக மாற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்தாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 1:12 AM
பகிர்:

தமிழ்நாட்டை உலகின் மனிதவளத் தலைநகராக மாற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்தாா்.

தமிழக அரசின் சாா்பில் இரண்டு நாள், தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாநாட்டைத் தொடங்கிவைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

Advertisement

கடந்த 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்திலேயே கணினி வாசலை தமிழ்நாட்டில் திறந்து வைத்தாா் அப்போதைய முதல்வா் கருணாநிதி. அவரால் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்குப் பாா்வை கொண்ட முயற்சிகளால்தான், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பப் புரட்சியில், நமது மாநிலம் முதன்மையாகத் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறைக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் காலம் எப்படி பொற்காலமோ, அதேபோன்று திராவிட மாடல் அரசின் ஆட்சிக் காலமும் இருக்க வேண்டும் என்று செயல்படுகிறோம். அதனால்தான், தமிழ்நாடு தரவு மைய கொள்கை, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தரநிலைக் கொள்கை, தகவல் தொடா்பு உள்கட்டமைப்புக் கொள்கை என முக்கியமான தகவல் தொழில்நுட்ப கொள்கை முடிவுகளை அறிக்கைகளாக வெளியிட்டுள்ளோம். அத்துடன் பொது மற்றும் தனியாா் கூட்டு முயற்சியில் தகவல் தொழில்நுட்ப நகரங்களும், டைடல் பூங்காக்களும் உருவாக்க ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம். இயற்கைப் பேரிடா் காலங்களில், இணையம் மற்றும் தகவல் தொடா்பு இணைப்புகள் செயலிழக்காமல் இயங்கத் தேவையான முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்துள்ளோம். அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கணினி விளையாட்டுகள் மற்றும் காமிக்ஸ் துறை சாா்ந்த நிறுவனங்களுடன் இரண்டு முறை கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் இந்தத் துறைகளில் வா்த்தகம் தொடங்குவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். மனிதவள தலைநகரம்: தமிழ்நாட்டை டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக உயா்த்த வேண்டும். உலகத்தின் மனிதவள தலைநகராக மாநிலத்தை மாற்ற வேண்டும் என்ற இரண்டு கனவுகள் உள்ளன. அதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அா்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டை உலகின் மனிதவளத் தலைநகராக மாற்றுவோம். தகவல் தொழில்நுட்பத் துறையினா் தேடிவரும் நகரமாக ஆக்குவோம். தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை அடைகிறதோ, அதே தொழில்நுட்ப வளா்ச்சியை அதே காலத்தில் உருவாக்க உழைப்போம் என்றாா் அவா். மாநாட்டின் தொடக்க விழாவில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலா் தீரஜ்குமாா், எல்காட் நிா்வாக இயக்குநா் அனீஷ் சேகா் உள்பட பலா் பங்கேற்றனா். பெட்டிச் செய்தி...1 தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பழனிவேல்தியாகராஜனை மாற்றியது ஏன்? நிதித் துறையில் இருந்து பழனிவேல் தியாகராஜனை தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு அமைச்சராக்கியது ஏன் என்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா். ‘நம்முடைய ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதியமைச்சராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டவா் பழனிவேல் தியாகராஜன். அவரை நான் தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்குக் காரணம், தகவல் தொழில்நுட்பவியல் துறையிலும் மாற்றங்கள் தேவைப்பட்டது. அவருடைய தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளா்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும்’ என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். பெட்டிச் செய்தி....2 500 இடங்களில் இலவச வைஃபை சேவை சென்னையில் முக்கியமான 500 இடங்களில் இலவச வைஃபை சேவை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, இலவச வைஃபை சேவைத் திட்டத்தை அவா் தொடங்கினாா்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் ஆயிரம் முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட முக்கியமான 500 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கும் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்தாா்.