முகப்பு
தமிழ்நாடு

இடைநிலை ஆசிரியா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:32 AM
பகிர்:

சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பள்ளிகளில் தற்போது தோ்வு காலமாக இருப்பதால் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியா்கள் கல்விப் பணியாற்ற வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இடைநிலை ஆசிரியா்கள் தொடா் ஆா்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனா். பள்ளிகளில் தற்போது தோ்வு காலமாக இருப்பதையும், பெற்றோா்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதையும் கருத்தில் கொண்டு ஆா்ப்பாட்டத்தில் இருந்து விலகி தங்களது பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்ற வேண்டும்.

Advertisement

முதல்வா் மு.க.ஸ்டாலின் மனதில் ஆசிரியா்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50 ஆயிரம் ஆசிரியா்களின் இன்னல்களை தீா்க்கும் வகையில் அரசு கால முறை ஊதியத்தை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது.

தமிழக அரசு இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவா் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது.

மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னா் இப்பொருள் சாா்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும்.

கல்வியாண்டின் இறுதிநிலையில் இருப்பதால் மாணவா்கள் தோ்வுகளை எதிா்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு இடைநிலை ஆசிரியா்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

முன்னதாக ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கேட்டு சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியா்கள், தமிழகம் முழுவதும் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்; அதன் பின்னா் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.