தமிழ்நாடு

கு.க. செல்வம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

DIN


சென்னை:  திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க. செல்வம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க. செல்வம் உடல்நிலைக் காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரரான  கு.க.செல்வம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும் வாஞ்சையும் குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது என்று எண்ணும்போது நெஞ்சம் விம்முகிறது. அவரது பேச்சுதான் பலருக்கும் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்குமே தவிர, அவரது வெள்ளை உள்ளம் பழகும் எவர்க்கும் கற்கண்டாய் இனிக்கும். இனி அந்தக் கற்கண்டைக் கழகத் தோழர்கள் காண இயலாது எனும் எண்ணம் வருத்துகிறது.


சென்னை மேற்குப் பகுதியில், கட்சி வளர்த்த செயல்வீரர், தென்சென்னை மாவட்டக் கட்சித் துணைச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர் எனக் கட்சிக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பிள்ளை மனம் கொண்ட கட்சி வீரர் அவர்!

எம்.ஜி.ஆர் அவர்களது மறைவுக்குப் பிறகு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, தலைவர் கருணாநிதியின் அன்புத் தம்பிகளில் ஒருவராக விளங்கினார். அதுநாள் முதலே என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பைச் செலுத்தி வந்தவர் கு.க.செல்வம். நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றினார். நான் வெளியூர் செல்லும்போது பலசமயம் என்னுடன் அவரும் வருவார்.

அண்மையில் சிறிது காலம் தடம் மாறிச் சென்றாலும், உடனே மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதுதான் கு.க.செல்வம். அவர் சென்றபோதே திரும்ப வந்துவிடுவார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

கு.க.செல்வம் அவர்களின் மறைவு என்பது அவரது குடும்பத்துக்கும் கட்சிக்கும் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும். என்னை நானே தேற்றிக் கொண்டு, அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடியாத்தி! சம்யுக்தா மேனன்..

ராஜஸ்தான் பேட்டிங்; வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே!

ஜப்பானில் 6ஜி: மின்னல் வேகத்தில் தரவு பரிமாற்றம்!

போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் காத்திருங்கள்... சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு!

என்னை கைது செய்த பின் ஆம் ஆத்மியில் ஒற்றுமை அதிகரித்துள்ளது -கேஜரிவால்

SCROLL FOR NEXT