தலையில் கல்லைப் போட்டு கணவன் கொலை! தேடப்படும் குடும்பத்தினர்!
விராலிமலையில் கணவனைக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
விராலிமலை அருகே செங்கல் சூளை தொழிலாளியை அவரது மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, தப்பியோடிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விராலிமலை அருகே உள்ள சரளபள்ளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(40). இவர் விராலிமலையில் கல்குத்தான் பட்டியில் உள்ள ஆறுமுகம் என்பவரது தனியார் செங்கல் சூளையில் தனது மனைவி இளஞ்சியம், மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட நான்கு பேர் செங்கல் சூளையில் தங்கி சூளையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சுப்பிரமணிக்கும் அவரது மனைவி இளஞ்சியம் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில், சூளை உரிமையாளர் ஆறுமுகம் சூளைக்கு வந்து பார்த்தபோது, சூளையில் யாரும் இல்லாததால் சுப்பிரமணி குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடத்தைப் பார்த்தபோது, பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுப்பிரமணி இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து ஆறுமுகம் விராலிமலை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். உரிமையாளர் ஆறுமுகம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய சுப்பிரமணியின் மனைவி இளஞ்சியம், அவரது தங்கை மற்றும் தங்கையின் கணவர் ஆகியோரை தேடி வருகின்றனர்.