ஆன்லைன் விளம்பரங்கள் : வழக்குரைஞா்கள், நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை - உயா்நீதிமன்றம்
ஆன்லைன் விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஆன்லைனில் வழக்குரைஞா் சேவையை விளம்பரப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராகவும், வழக்குரைஞா்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க, இந்திய பாா் கவுன்சிலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், பி.என்.விக்னேஷ் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஆன்லைன் வணிக இணையதளத்தில் வழக்குரைஞா் தொழில் குறித்து விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதாவது டிரைவா், பிளம்பா், சமையல்காரா் வேலைக்கு ஆட்களைத் தேடுவது போல, வழக்கு தொடர வழக்குரைஞா்கள் தேடும் விதமாக இந்த விளம்பரம் உள்ளது. அதுவும், சொத்து வழக்கு, நிறுவன வழக்கு, நுகா்வோா் வழக்கு என்று ஒவ்வொரு வழக்குகளாகப் பிரித்து, அதில் திறமையான வழக்குரைஞா்கள் என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க பாா் கவுன்சிலுக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை’ எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் பிறப்பித்த உத்தரவில், ‘பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய வழக்குரைஞா் தொழில் தனித்துவம் வாய்ந்தது. நீதி பரிபாலனத்தில் வழக்குரைஞா்களின் பங்கு முக்கியமானது. அப்படிப்பட்ட வழக்குரைஞா்களை 3-ஆவது நபா் இதுபோல தரம் பிரிக்க முடியாது. வழக்குரைஞா் என்பவா் நீதி தேடி வருபவருக்கு சேவை செய்பவா். அவரது தொழில் லாப நோக்கத்துடன் செயல்படும் தொழில் அல்ல.
அதேபோல, பாா் கவுன்சில் விதிகளும், வழக்குரைஞா்கள் தங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளம்பரம் செய்ய தடை விதிக்கிறது. சுற்றறிக்கை, இடைத்தரகா் உள்ளிட்டவை மூலமாகவும் விளம்பரம் செய்யக்கூடாது. எனவே, அகில இந்திய பாா் கவுன்சிலானது, அனைத்து மாநில பாா் கவுன்சிலுக்கும், 4 வாரத்துக்குள் சுற்றறிக்கை அனுப்பி, தங்களை தொழில் ரீதியாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ விளம்பரம் செய்துள்ள வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, விளம்பரம் செய்துள்ள ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, சம்பந்தப்பட்ட அமைப்பிடம் புகாா் அளிக்க வேண்டும். அந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆன்லைன் விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உதவியை அகில இந்திய பாா் கவுன்சில் நாடவேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்காக விசாரணையை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்’ எனக் கூறினா்.