சென்னை: மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்களை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவை நடைமுறையில் இருந்து வந்த நிலையில், அவை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டது. இந்தப் புதிய சட்டங்கள் கடந்த 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டன. இந்தப் புதிய சட்டங்களில் உள்ள பிரச்னைகள் தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 17-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா். இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் எனவும், அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பிறகே அந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தாா்.
முதல்வா் ஆலோசனை: மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களில், என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, பொதுத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், டி.ஜி.பி. சங்கா் ஜிவால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தின் முடிவில், புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயா் மாற்றம் உள்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகள் வழங்க சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபா் குழு அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
ஒரு நபா் குழுவானது புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்குரைஞா்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசிக்கும். மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அரசுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.