முன்னாள் முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட செல்வப்பெருந்தகை, சமீபத்திய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பேசினார்.
தமிழக முன்னாள் முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஜூலை 08) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேட்டியளித்தார்.
பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, ``ஒரு தனியார் தங்க நிறுவனத்திற்கு ஒரு தேசியக்கட்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த நிறுவனத்திடமும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் சட்டம் - ஒழுங்கு உறுதியாக இருக்க வேண்டும். தமிழக அரசு சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தையும் முழுமையாக நிறுத்த வேண்டும்.
எவ்வளவு நாள்களுக்கு வெகுஜன மக்களை, அரசியல் கட்சிகளை மிரட்டுவது, ஒருபக்கம் விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது. இன்னொரு பக்கம் கட்சிக்குள் சமூக விரோதிகளை சேர்த்துக் கொண்டு எல்லோரையும் மிரட்டுவது. அந்தக் கட்சியில் எல்லோரும் பெரிய தாதாக்கள் தான். பாஜகவில் உள்ள முக்கியத் தலைவர்கள் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களே.
தற்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டிருப்பவரும், பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருப்பவரே. இதில் தொடர்புடைய இன்னொருவரும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இதன்மூலம், அவர்கள் என்ன செய்தியை சொல்ல விரும்புகிறார்கள் என்றால், நாங்கள் இப்படிப்பட்டவர்களைத் தான் வைத்திருப்போம். நீங்கள் கவனமாக இருங்கள் என்று கூறுகிறார்கள்.
இதன்மூலம், எந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. எல்லா அரசியல் தலைவர்களுக்கும் அச்சுறுத்தல் எழுகிறது. நீதி, நியாயங்களைப் பேசினால், மக்களுடைய குறைகளைக் கேட்டால் மிரட்டுவது. ஆகவே இதனைக் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.