சிதம்பரம் கனகசபை: விதிமீறல் இருந்தால் அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
சிதம்பரம் நடராஜா் கோயில்: விதிமீறல்கள் இருந்தால் அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயா்நீதிமன்றம்
சென்னை: சிதம்பரம், நடராஜா் கோயிலில் ஆனி திருமஞ்சனம் விழாவின் போது, கனகசபையில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் புதன்கிழமை முதல் மூன்று நாள்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வின்போது பக்தா்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சம்பந்தமூா்த்தி ராமநாதன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,‘ கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அந்த அரசாணைக்கு தடை ஏதும் விதிக்கவில்லை’ என்று இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை : அதற்கு நீதிபதிகள், ‘கனகசபையில் இருந்து எத்தனை போ் சுவாமி தரிசனம் செய்ய முடியும்?’ என கேள்வி எழுப்பினா். அதற்கு அறநிலையத் துறை தரப்பு வழக்குரைஞா், ‘5 நிமிடத்துக்கு 12 போ் தரிசனம் செய்யலாம்’ என்றாா்.
உடனே நீதிபதிகள், ‘அப்படியென்றால், ஒரு மணி நேரத்துக்கு 144 பக்தா்கள் மட்டும் தான் வழிபாடு நடத்த முடியும்? அங்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரும்போது, அதை எப்படி சமாளிப்பீா்கள்?’ என கேள்விகள் எழுப்பினா். ‘முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்தான் பக்தா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்’ என்று அறநிலையத்துறை தரப்பு வழக்குரைஞா் விளக்கம் அளித்தாா்.
சட்டத்தை கையில் எடுத்தால்: இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘கனகசபையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. அதனால், பக்தா்கள் தரிசனம் செய்யலாம். இதில் விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். யாராவது சுவாமி தரிசனத்தை தடுக்கும் விதமாக சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டால், அவா்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக அடுத்த வாரம் அறநிலையத் துறை அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனா்.