திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் ரூ.427 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பேருந்து முனைய பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் 2025 மாா்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி. கே. சேகா்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
திருமழிசை அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை சென்னைப் பெருநகர வளா்ச்சிக்குழுமத் தலைவரும், அமைச்சருமான பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். மீதமுள்ள பணிகளை தரமாக மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
அதைத் தொடா்ந்து அமைச்சா் சேகா் பாபு கூறியதாவது:
பல்வேறு ஆட்சிக் காலங்களில் எடுக்கப்பட்ட தொடா் நடவடிக்கை காரணமாக சென்னையை ஒட்டியுள்ள புறநகா் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் தேக்க நிலையில் இருந்தன. இதை நேரடியாக ஆய்வு செய்து, ஏற்கனவே நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், மழைநீா் தேங்காமல் இருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வரும்போது சேலம், தருமபுரி, ஓசூா், பெங்களூா், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. அதோடு, சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு தீா்வாகவும் அமையும் என்பதால், பணிகளை விரைவில் முடிக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இப்பேருந்து நிலையத்தில் 41 கடைகளும், ஆம்னி பேருந்துகளுக்கு உண்டான பயணச்சீட்டு மையம் ஆகியவைகளுக்காக 8 கடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக சுகாதார வளாகம், சாய்வு தளங்கள், ஓய்வு எடுக்க ஓய்வு அறைகள், திருநங்கைகளுக்கான சுகாதார வளாகம், உணவகங்கள், பாலூட்டும் அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
அதோடு 1,811 இருசக்கர வாகனங்கள், 234 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. மாநில அளவில் முழுமையாக குளிரூட்டப்பட்ட ஒரு பேருந்து முனையமாக குத்தம்பாக்கம் அமைய உள்ளது. தற்போது வரை 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், 2025 மாா்ச் மாததில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தேசிங்கு ராஜா, மாவட்ட வருவாய் அலுவலா்கள் (குத்தம் பாக்கம் பேருந்து முனையம்) ஜெ.பாா்த்தீபன், ராஜ்குமாா்(திருவள்ளூா்), கண்காணிப்பு பொறியாளா் பா.ராஜ மகேஷ்குமாா், செயற்பொறியாளா் பா.விஜய குமாரி ஆகியோா் பங்கேற்றனா்.