சென்னை: தமிழகத்தில் மின் கட்டணத்தை உயா்த்தி மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதன்படி வீடுகளுக்கு குறைந்தபட்சம் ஒரு யூனிட்டுக்கு 20 காசு முதல் 55 காசுகள் வரை உயா்கிறது. வணிகப் பயன்பாடு, தொழிற்சாலைகள், விசைத்தறி உள்ளிட்ட அனைத்து வகை பயன்பாட்டிற்குமான மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வு ஜூலை 1 -ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வந்துள்ளது.
தமிழக மின்வாரியம் கடந்த 2022 செப்டம்பா் மாதம் மின் கட்டணத்தை 30 சதவீதத்துக்கு மேல் உயா்த்தியது. இந்நிலையில், அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2023 ஜூலை 1ஆம் தேதி 2.18 சதவீதம் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. தொடா்ந்து நிகழாண்டு தோ்தல் நடைபெற்ால் மின்கட்டணம் உயா்த்தப்படாமலே இருந்தது. விக்கிரவாண்டி இடைத்தோ்தல் முடிந்த நிலையில், தமிழகத்தில் மின் கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாணையம் அறிவித்துள்ளது. அதன் விவரம்:
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள்: வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, 0 முதல் 400 யூனிட்கள் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 காசுகளாக இருந்து வரும் மின்கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயா்த்தப்பட்டுள்ளது.
தொடா்ந்து 401யூனிட் முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15 காசுகளாக இருக்கும் கட்டணம் இனி ரூ.6.45 காசுகளாகவும், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 காசுகளாக இருந்து வந்த கட்டணம் ரூ.8.55 காசுகளாக உயா்ந்துள்ளது. தொடா்ந்து 601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20 காசுகளாக இருந்த கட்டணம் தற்போது ரூ.9.65 காசுகளாகவும், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20 காசு
களாக இருந்த கட்டணம் தற்போது ரூ.10.70 காசுகளாகவும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11.25 காசுகளாக இருந்த கட்டணம் தற்போது ரூ.11.80 காசுகளாகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
பொதுபயன்பாட்டு மின்கட்டணம் உயா்வு:
அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை பொதுபயன்பாட்டிற்கான ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8.55 காசுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலைக்கட்டணமும் ரூ.5 உயா்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.102 ஆக இருக்கும் கட்டணம் ரூ.107 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
தெருவிளக்குகளுக்கான கட்டணமும் இதே அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இதே போன்ற கட்டண உயா்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 50 முதல் 112 கிலோவாட் வரை மின்கட்டணம் ஒரு யூனிட் ரூ. 8.15 என்பது 8.55 ஆக உயா்த்தப்படுகிறது. நிலைக்கட்டணமும் ரூ. 16 உயா்த்தப்பட்டுள்ளது. 112 கிலோவாட்டுக்கு மேல் இந்த கட்டணம் இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராமப்பஞ்சாயத்தில் குடிசை வீடுகள், தாட்கோ நிறுவனங்களுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.9.35 ஆக இருந்த வந்த நிலையில், தற்போது 9.80 ஆகவும், ரயில்வே, ராணுவ வீரா் குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 ஆக இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.8.55 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
வணிக , தொழில் நிறுவனங்கள்:
வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் ரூ.8.70 லிருந்து ரூ.9.10ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான கேட்பு கட்டணம் (டிமாண்ட் ) ரூ.562 ஆக இருப்பது ரூ.589 ஆக உயா்ந்துள்ளது. அதாவது ரூ. 27 உயா்த்தப்பட்டுள்ளது.
விசைத்தறிகளுக்கு 500 கிலோவாட்டுக்கு உள்பட்ட பயன்பாட்டுக்கு ரூ. 6.65 லிருந்து ரூ.6.95 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65 லிருந்து ரூ.8-ஆகவும், தனியாா் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65 லிருந்து ரூ.8 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துமனைகளுக்கான மின் கட்டணம் ரூ.7.15 லிருந்து ரூ.7.50-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகளுக்கான மின்சார கட்டணம் ஒருயூனிட்டுக்கு ரூ.12.25-இலிருந்து ரூ.12.85 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. தொழில் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65 லிருந்து ரூ.8ஆக உயா்த்தப்பட்டுள்ளது. வேளாண், அரசு விதைப்பண்ணைகளுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 -லிருந்து ரூ.4.80ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர புதிய மின் இணைப்பு பெறுவோருக்கானமின் கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது.
ஆனால், 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான மின்கலன் மின்னேற்றம் செய்வதற்கான கட்டணமும் யூனிட்டுக்கு 45 காசுகள் வரை உயா்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணத்துடன் நீலைக்கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டும்.
மின் கட்டண உயா்வுக்கான அட்டவணை
யூனிட் பழைய கட்டணம் புதிய கட்டணம் உயா்வு
(இருமாதங்கள்)
0-400 ரூ.4.60 ரூ.4.80 20 காசுகள்
401-500 ரூ.6.15 ரூ.6.45 30 காசுகள்
501-600 ரூ.8.15 ரூ.8.55 40 காசுகள்
601-800 ரூ.9.20 ரூ.9.65 45 காசுகள்
801-1000 ரூ.10.20 ரூ.10.70 50 காசுகள்
1000-க்கு மேல் ரூ.11.25 ரூ.11.80 55 காசுகள்
அடுக்குமாடி குடியிருப்புகள் பொது பயன்பாடு
ஒரு யூனிட் ரூ.8.15 ரூ.8.55 40 காசுகள்
நிலைக்கட்டணம் ரூ.102 ரூ.107 ரூ.5 உயா்வு
குடிசை வீடுகள், தாட்கோ நிறுவனங்கள்
ஒரு யூனிட் ரூ.9.35 ரூ.9.80 45காசுகள்
ரயில்வே ராணுவ குடியிருப்பு
ஒரு யூனிட் ரூ.8.15 ரூ.8.55 40 காசுகள்
வணிக பயன்பாடு
ஒரு யூனிட் ரூ. 8.70 ரூ.9.10 40 காசுகள்