எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிருதிவிராஜ் 
தமிழ்நாடு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது!

சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருதிவிராஜ் கைது.

Ravivarma.s

கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் பிருதிவிராஜை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

நில மோசடி வழக்கில் செவ்வாய்க்கிழமை கைதான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோர் நள்ளிரவில் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆவணங்களை தொலைத்து விட்டதாக கூறிய சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருதிவிராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்த நிலையில், புதன்கிழமை காலை கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வாங்கலைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான செல்வராஜ், பிரவீன் உள்பட ஏழு பேர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். அதன்பேரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். 3 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பின் ஜூன் 25ஆம் தேதி முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 35 நாள்களுக்கு மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே நாளில் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் சகோதரர் சேகர், மற்றும் பிரவீண் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் தெரிவித்திருந்தார். இப்புகார் வாங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி மேற்கண்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின் போது உடனிருக்க வேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மற்றும் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு ஜூலை 1-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு கடந்த ஜூலை 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இரு தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில் ஜூலை 4ஆம் தேதி இடைக்கால முன் ஜாமீன் தேவையில்லை. முன் ஜாமீன் மனு மீது ஜூலை 5 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.

ஜூலை 5ஆம் தேதி அரசு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஷோபனா தரப்பு என 3 தரப்பு வாதங்கள் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிஐடி வழக்கு மற்றும் வாங்கல் வழக்கு என தலா இரு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிபதி சண்முகசுந்தரம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி திங்கள்கிழமை மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு எம்.ஆர்.விஜய பாஸ்கர் தாக்கல் செய்த மனு அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கேரள மாநிலம் திருச்சூரில் நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தில் உள்ள திண்ணப்பா நகரில் செயல்பட்டு வரும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு மதியம் 2 மணி அளவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு 12 மணி வரை நடைபெற்றது. பின்னர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர் படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோரை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே இந்த வழக்கில் நிலம் தொடர்பான ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறிய சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை சிபிசிஐடி போலீசார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக புதன்கிழமை காலை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் கரூர் நகர காவல் நிலையத்தில் அதிமுக ஆட்சியில் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT