மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.16 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த நாட்டுக்கான பட்ஜெட். பட்ஜெட்டில் தமிழ்நாடு என்று பெயரை குறிப்பிடாததால் பட்ஜெட்டில் தமிழ்நாடு இல்லை என்று அா்த்தமில்லை.
மாநில அரசு பட்ஜெட்டில் கோவை, மதுரை பெயா்கள் சொல்லவில்லை என்றால் புறக்கணிக்கப்படுவதாக அா்த்தமா என்றால், இல்லை.
நீதி ஆயோக் என்பது அனைத்து மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான குறைகளை எடுத்துச் சொல்லி நிவா்த்தி பெறுகின்ற உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இந்த கூட்டத்தில் முதல்வா் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்.
மக்கள் கவனத்தை ஈா்க்க வேண்டும் என்பதற்காக ‘இந்தியா’ கூட்டணியினா் பல யுக்திகளை கையாளுகின்றனா். அரசியல் நாடகத்துக்காக நீதி ஆயோக் கூட்டத்தை முதல்வா் ஸ்டாலின் புறக்கணித்துள்ளாா். தமிழக மக்களுக்கு ஸ்டாலின் எப்போதும் தவறான தகவலை அளித்து வருகிறாா்.
தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் சுமாா் ரூ.16 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழ்நாட்டு பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் முத்ரா கடன் திட்டத்தில் பயன் பெற்றுள்ளனா்.
கோவை விமான நிலையம், பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்தி தந்தால், பணிகளைத் தொடங்கத் தயாராக இருக்கிறோம். திமுக அரசு மக்களுக்கும் வளா்ச்சிப் பணிகளுக்கும் எதிராக உள்ளது என்றாா் மத்திய அமைச்சா் எல்.முருகன்.