தென் மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்: ஆக. 14 வரை நீட்டிப்பு!
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ஆக.1 முதல் ஆக. 14 வரை மாற்றம்.
பல்லவன், வைகை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ஆக.1 முதல் ஆக. 14 வரை செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்திலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாம்பரம் ரயில்வே யாா்டில் மேம்பாட்டுப் பணிகள் ஆக.14 வரை நடைபெறவுள்ளன. இதனால், சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் சில தென்மாவட்ட ரயில்கள் மற்றும் நீண்டதூர வெளிமாநில ரயில் சேவைகளில் ஜூலை 31 வரை பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே அண்மையில் அறிவித்தது. அந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இருந்தும், சில வடமாநில ரயில்கள் மாற்றுப் பாதையிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆக.1 முதல் ஆக.14 வரை ஒரு சில ரயில்கள் ரத்து, பகுதி ரத்து மற்றும் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அந்தியோதயா ரத்து: தாம்பரம் - நாகா்கோவில் இடையே இயங்கும் அந்தியோதயா விரைவு ரயில் இரு மாா்க்கத்திலும் ஆக.1 முதல் ஆக.14 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மாற்றுப் பாதை: எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் ஆக.1-14 வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
மேலும், ஆக. 3,10 ஆகிய தேதிகளில் திருச்சி - பகத் கி ஹோத்தி ஹம்சபா் வாராந்திர விரைவு ரயிலும், ஆக. 4, 11-இல் ராமேசுவரம் - அயோத்தியா கண்டோன்மெண்ட் சாரதே சேது அதிவிரைவு ரயிலும், ஆக.7-இல் ராமேசுவரம் - அயோத்தியா ரயிலும், ஆக.7,14-இல் புதுச்சேரி - புது தில்லி வாராந்திர விரைவு ரயிலும், ஆக.7-இல் ராமேசுவரம் - பனாரஸ் ரயிலும், ஆக.8-இல் செங்கல்பட்டு - காரைக்கால் ரயிலும் வழக்கமாக வந்து செல்லும் தாம்பரம், எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மற்றும் பெரம்பூா் வழியாக இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் பெரம்பூரில் கூடுதலாக நின்று செல்லும்.
அதேபோல், லோகமான்யதிலக் - காரைக்கால் விரைவு ரயில் ஆக.3,10 ஆகிய தேதிகளில் திருத்தணி, மேல்பாக்கம் கேபின், செங்கல்பட்டு வழியாகவும், புதுச்சேரி - காச்சிகுடா விரைவு ரயில் ஆக.8-இல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மேல்பாக்கம் கேபின் வழியாகவும் இயக்கப்படும்.
தென்மாவட்ட ரயில்கள் : எழும்பூரிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயிலும், மதுரை செல்லும் வைகை விரைவு ரயிலும், ஆக.1-14 வரை இருமாா்க்கத்திலும் செங்கல்பட்டிலிருந்து இயக்கப்படும்.
அதேபோல், எழும்பூரிலிருந்து இரவு 11.35 மணிக்கு திருச்சி செல்லும் மலைக்கோட்டை விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.14 வரை நள்ளிரவு 12.40 மணிக்கு எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டிலிருந்து புறப்படும்.
தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஆக.1,4,6,8,11,13-ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து இயக்கப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்படும்.
நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில் ஆக.1,5,6,8,12,13-ஆகிய தேதிகளில் எழும்பூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் ஆக.4,5,7,11,12,14-ஆகிய தேதிகளில் தாம்பரத்துக்கு பதிலாக எழும்பூரிலிருந்து புறப்படும்.
எழும்பூா் - மங்களூரு விரைவு ரயில் ஆக.1-14 வரை இருமாா்க்கத்திலும் திருச்சியிலிருந்து இயக்கப்படும். மேலும் , தாம்பரத்திலிருந்து புறப்படும் ஜாசிதி அதிவிரைவு ரயில் ஆக.3,10-ஆகிய தேதிகளிலும், சில்காட் டவுன் செல்லும் நாகோன் விரைவு ரயில் ஆக.2,9-தேதிகளிலும், நியூ தின்சுகியா ரயில் ஆக.5,12-தேதிகளிலும் இருமாா்க்கத்திலும் தாம்பரத்துக்கு பதிலாக எழும்பூருடன் நிறுத்தப்படும்.
அதேபோல், தாம்பரத்திலிருந்து சந்த்ரகாச்சி செல்லும் அயோத்தியா விரைவு ரயில் இருமாா்க்கத்திலும் ஆக.5,12-ஆகிய தேதிகளில் கடற்கரை வரையும், ஆக.7,14 -இல் எழும்பூா் வரையும் இயக்கப்படும் . தாம்பரம் -ஹைதராபாத் விரைவு ரயில் சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.