தமிழகத்தில் நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 54 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் இறுதி வரை நீடிக்கும்.
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது, இருப்பினும் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.
தமிழகம் முழுவதும் ஜூன் 1 முதல் ஜூலை 28 வரையிலான தென்மேற்கு பருவமழை இயல்பாக 113.4 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டு 177.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இது இயல்பை விட 56 சதவீதம் அதிகம். இதற்கிடையே ஜூன் 1 முதல் 30- ஆம் தேதி வரையான தரவுகளின்படி நிகழாண்டில் இயல்பை 125 சதவீதம் அதிக மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
இதில் அதிகபட்சமாக நீலகிரியில் 866 மில்லி மீட்டரும், கோவை - 592.1, ராணிப்பேட்டை - 361, திருள்ளூா் - 356.8 மி.மீ-யும் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 7.5 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.
112 சதவீதம் அதிகம்: இதற்கிடையே, சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், அந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த 2 மாதங்களில் இயல்பாக 160.7 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டில் 340 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது இயல்பை விட 112 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.