ஆத்தூர் அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
ஆத்தூர் அருகே முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம். ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் முத்துமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தை சுற்றி வந்த எடப்பாடி பழனிசாமி கருவறையில் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் முத்துமலை முருகனை தரிசனம் செய்தார்.
பின்னர் வேலுடன் சன்னதியை சுற்றி வந்தார்.
அதனையடுத்து தியான மைய இடத்தில் அமர்ந்து 10 நிமிடம் தியானம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டதும் அங்கிருந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.