முகப்பு
தமிழ்நாடு

உதயநிதியை நான் முந்திக்கொண்டேன்: மு.க. ஸ்டாலின் சுவாரசியம்

பள்ளிக் கல்வித் துறை நிகழ்ச்சியில் உதயநிதியை நான் முந்திக்கொண்டேன் என ஸ்டாலின் நகைச்சுவையாக பேசியிருக்கிறார்.

Updated On : 14 ஜூன், 2024 at 9:12 AM
மு.க. ஸ்டாலின்
பகிர்:

இந்த முறை, பள்ளிக் கல்வித்துறை நிகழ்ச்சிக்கு, உதயநிதியை நான் முந்திக்கொண்டேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் இன்று ஐம்பெரும் விழா நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், பள்ளிக்கல்வித் துறை நிகழ்ச்சிகளில் பொதுவாகவே நான் ஆர்வத்துடன் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், என்னை விட அதிகமாக கலந்துகொள்ளும் ஒருவர் இருக்கிறார். இந்த மேடையில் இருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி! அதனால், இந்த முறை நான் முன்பே, ரிசர்வ் செய்துவிட்டேன்.

தேர்வு முடிவுகள் வந்ததும், நானே நம்முடைய அமைச்சர் மகேஸ் அவர்களுக்கு ஃபோன் செய்து, “தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும், நான் கலந்துகொள்ளும் முதல் அரசு விழாவாக, இந்தப் பாராட்டு விழாதான் இருக்கவேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்”என்று சொல்லியிருந்தேன். அதன்படி, இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும், அவருக்குத் துணைநின்ற அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். இந்த விழாவில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பள்ளி மாணவர்களான உங்களை பார்க்கும்போது, எனக்கும் இளமை திரும்பி ஆற்றல் வந்துவிடுகிறது.

பொதுவாக, அரசியல் மேடைகளில்தான் ஐம்பெரும் விழாக்கள், முப்பெரும் விழாக்களை நடத்துவோம். ஆனால், இப்போது பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

முதல் விழா, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற வைத்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு.

இரண்டாவது விழா, பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு. மூன்றாவது, தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு டேப் வழங்குவது. நான்காவது, அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்குவது. ஐந்தாவது, விளையாட்டில் தேசிய அளவில் பதக்கம் வாங்கியவர்களுக்கு பாராட்டு, இப்படியாக இந்த ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →