தேர்தலில் பெற்றது சாதாரண வெற்றியல்ல, வரலாற்று வெற்றி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் திமுக முப்பெரும் விழாவில் அவர் பேசியதாவது, மக்களவைத் தேர்தல் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சகோதரர் ராகுல் காந்தியின் அன்பை என்றைக்கும் மறக்க முடியாது. 8 முறை வந்து பிரதமர் மோடி கட்டமைத்ததை ராகுல் ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து தகர்த்துவிட்டார். ராகுல்காந்தி கொடுத்த இனிப்பு கணிப்புகளை பொய்யாக்கிவிட்டது. இந்த வெற்றி விழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கான பாராட்டு விழா அல்ல. மக்களவைத் தேர்தலில் நாம் பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.
புதிய வரலாற்றை படைப்பதற்கு கிடைத்த வெற்றி. பாஜகவால் தனித்து அரசமைக்க முடியாத நிலைமையை இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளது. 2024இல் பெற்றிருக்கும் திமுகவின் வெற்றி அரசு மீதுள்ள திருப்தியால் கிடைத்த வெற்றி. கூட்டணி கட்சிகளுடன் இருப்பது கொள்கை ரீதியான உறவு. திமுகவின் கொள்கை கூட்டணியாலேயே 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்தது. பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது பிரதமர் மோடியின் தோல்வி. சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமாரின் கூட்டணியால்தான் மோடியால் பிரதமராக பதவியேற்க முடிந்தது.
237 உறுப்பினர்கள் பாஜவுக்கு எதிராக மக்களவையில் அமர்ந்திருக்கிறோம். 40 எம்.பி.க்களும் நாடாளுமன்ற கேண்டீனில் வடை சாப்பிடுவார்கள் என்று சொல்கின்றனர். திமுகவின் 40 எம்.பி.க்களும் கருத்துகளால் உங்களின் ஆணவங்களை சுடுவார்கள். பாஜவிற்கு பெரும்பான்மை இருந்தபோதே நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். தமிழக எம்.பி.க்களின் குரல் இனி வலுவாக நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கப் போகிறது. பல்வேறு விஷயங்களை கையிலெடுத்தும் பாஜகவால் 400 இடங்களில் வெல்ல முடியவில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றத் துடிக்கும் பாஜகவை தடுக்கும் அரணாக 40 எம்.பி.க்கள் இருப்பார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.