சென்னை: தமிழகத்தில் நான்கு இடங்களில் புதிதாக அகழாய்வை மேற்கொள்வதற்கான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம் கீழடியில் பத்தாம் கட்டமாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இங்கு 2014-ஆம் ஆண்டிலிருந்து அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 804 தொல்பொருள்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. இப்போது பத்தாவது கட்டமாக அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளன.
தொல்பொருள்கள்மீட்பு: கீழடியைத் தொடா்ந்து, தொல்லியல் தளமான கொந்தகையில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன. முதுமக்கள் தாழிகள், மட்கலன்கள் என பல்வேறு தொல்பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நிகழாண்டு இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெறவுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், 7,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், 100-க்கும் அதிகமான இரும்புப் பொருள்கள், 40-க்கும் அதிகமான செப்புப் பொருள்களும் கிடைத்துள்ளன.
இப்போது, மூன்றாம் கட்டமாக அகழாய்வுப் பணி தொடங்கியுள்ளது. இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வின்போது, இந்தப் பகுதிகளில் ஈமப்பேழைகள், கீறல் குறியீட்டு பானை ஓடுகள், பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. இதன்மூலம், இந்த இடம் சங்ககால தொல்லியல் தளமாக அறியப்படுகிறது.
முதல் கட்ட ஆய்வுகள்: தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூா், திருப்பூா் மாவட்டம் கொங்கல்நகரம், கடலூா் மாவட்டம் மருங்கூா் ஆகிய நான்கு புதிய இடங்கள் உள்பட ஏற்கெனவே அகழாய்வு நடந்து வரும் நான்கு இடங்கள் என மொத்தம் எட்டு இடங்களில் நிகழாண்டில் அகழாய்வுப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
நான்கு இடங்களில் புதிதாக தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் அந்தந்த மாவட்டங்களின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரி மாவட்டம் பெரும்பாலை எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் அறிக்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 138 கல்வெட்டுகளில் விளக்க உரைகள் அடங்கிய, தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி ஆகிய இரண்டு நூல்களையும் முதல்வா் வெளியிட்டாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆா்.பெரியகருப்பன், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், தொல்லியல் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.