சமூக விரோத சக்திகளிடமிருந்து மக்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும், ஓடி ஒளிபவன் நான் அல்ல; பொறுப்பை உணர்ந்து பதிலளித்துள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 49 பேர் பலியான நிலையில், சம்பவம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருணாபுரம் சம்பவத்தைப் பொருத்தமட்டில், காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியதால் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது.
உடனடியாக, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அவசர மருத்துவ உதவிகளைச் செய்திட அறிவுறுத்தினேன். மருத்துவப் பணிகளை விரைவுபடுத்திட கூடுதலாக 57 அரசு மருத்துவர்கள், விழுப்புரம், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கள்ளச்சாராய சம்பவத்தில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யும். பெற்றோரை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும், பெற்றோர் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
நடைபெற்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று இங்கு பேசினார்கள். உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் எந்தப் பிரச்சினையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டிருக்கிறேன்.
குற்றவாளிகளைக் கைது செய்து விட்டுத்தான் உங்களுக்கு பதில் அளித்திருக்கிறேன். திறந்த மனத்தோடு இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன். எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், போதை பொருட்கள் விவகாரத்தில் அமைச்சர்கள், உயர்காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டது விசாரிக்கப்பட்டு அந்த வழக்கு நீதிமன்றத்திலும் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் பற்றிய பட்டியல் என் கையில் இருக்கிறது. அதையெல்லாம் வைத்து அரசியல் பேச நான் விரும்பவில்லை. துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன், மெத்தனால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் ஆலைகளில் தணிக்கை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ளும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களுக்கு 18 வயது ஆகும் வரை மாதம் ஐந்தாயிரம் பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 122 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஷச் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.