முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஸ்டாலின் பதில்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 21 ஜூன், 2024 at 7:51 AM
பேரவையில் முதல்வர் விளக்கம்
பகிர்:

சென்னை: கள்ளச்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் பலியான சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் பேரவையில் இன்று விளக்கினார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்,

அமைச்சர்கள் மட்டுமல்லாமல், உள்துறைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் நேரில் செல்ல உத்தரவிட்டிருந்தேன். அவர்களை இரண்டொரு நாளில் விசாரணை அறிக்கையைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அந்த அறிக்கை கிடைத்ததும் அதன் மீதான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன்.

நம் அனைவருக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வேதனையை அளித்துள்ள இந்தத் துயர சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

* இதன் முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

* கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

* மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்

* கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்

* திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்

* திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர்

* திருக்கோவிலூர் சட்டம்-ஒழுங்குக் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

* மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தீர விசாரிக்கவும், அதனடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த வழக்கினை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க உத்தரவிட்டேன்.

அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.,யும் நேரில் சென்று விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்.

எதிர்கால சமுதாயத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் போதைப் பொருள்களை எந்தவகையிலும் அனுமதிக்க இயலாது என்ற அடிப்படையில், இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தீவிரமாக எடுத்து வருகின்றோம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 122 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →