நீலகிரி, கோவைக்கு இன்று ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை
திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.
தமிழ்நாடுநீலகிரி, கோவைக்கு இன்று ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை
திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.
தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஞாற்றுக்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
‘ஆரஞ்ச்’, ‘மஞ்சள்’ எச்சரிக்கை: இதில் நீலகிரி மற்றும் கோவை மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 23-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 23-இல் திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், ஜூன் 24, 25-ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
5 இடங்களில் வெயில் சதம்: இதனிடையே, தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோடு - 100.58, கடலூா் - 100.4, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி - (தலா) 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 23 முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னையில்.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 23, 24-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் ஜூன் 23 முதல் 26 வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் , மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.