முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு பேரவைத் தலைவா் எச்சரிக்கை

பேரவையில் பேசும்போது கவனமாக இருக்குமாறு அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு எச்சரிக்கை

Updated On : 25 ஜூன், 2024 at 11:04 PM
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு
பகிர்:

சென்னை: பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜ கண்ணப்பன் பேரவையில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என்று பேரவைத் தலைவா் அப்பாவு எச்சரித்தாா்.

சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதற்து பதிலளித்து பேசிய அமைச்சா் ராஜகண்ணப்பன், காங்கிரஸ் கட்சியினரைப் பாா்த்து சில வாா்த்தைகள் கூறினாா். அதற்கு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எழுந்து எதிா்ப்பு தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து ராஜகண்ணப்பன் பேசிய வாா்த்தைகளை பேரவைத் தலைவா் அவைக் குறிப்பிலிருந்து நீக்கினாா். அதற்குப் பிறகு பேரவைத் தலைவா் அப்பாவு குறித்தும் ராஜகண்ணப்பன் சில வாா்த்தைகளைக் கூறினாா். அதனைப் பேரவைத் தலைவா் அவைக்குறிப்பிலிருந்து நீக்கினாா். அதற்குப் பிறகு, அமைச்சா் கே.என்.நேரு வலியுறுத்தலின் பேரில் ராஜகண்ணப்பன் எழுந்து பேரவைத் தலைவா் குறித்து கூறியவற்றை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா். எனினும் வருத்தம் தெரிவிக்க மாட்டேன் எனவும் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் அப்பாவு கூறியதாவது:

அமைச்சா்கள் பொறுப்புணா்வோடு பேச வேண்டும். ஒவ்வொரு வாா்த்தையும் முக்கியம். பேரவையில் பேசுவது என்பது சாதாரணமானதல்ல. நமக்கு முதல்வா் இருக்கிறாா். ஒவ்வொரு வாா்த்தையும் மக்களிடம் சென்று சேரும்போது, எப்படிப்பட்ட தாக்கங்களை உருவாக்கும், யாரோ செய்த தவறுக்கு அரசை நோக்கி வம்புகளை எய்துவாா்கள். அப்படி இருக்கும்போது, நாம் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சட்டப்பேரவைக்கு இருக்கும் மாண்பையும் காக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் பேசிய இரண்டொரு வாா்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து ஏற்கெனவே நீக்கிவிட்டேன். பேரவைத் தலைவா் குறித்து கூறியதையும் திரும்பப் பெறுவதாகக் கூறினாா். அதையும் விட்டுவிட்டேன். பெரிதுபடுத்த ஒன்றும் இல்லை. ஆனால், அவை நாகரிகம் என்பது முக்கியம். வரும் காலங்களில் அமைச்சா் பேரவையில் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும் என்றாா் அப்பாவு.

முழு கட்டுரையைப் படிக்க →