கள்ளக்குறிச்சி விவகாரம்: சிபிஐ-க்கு மாற்ற கோரிய அதிமுக, பாமகவின் மனு ஒத்திவைப்பு
அதிமுக, பாமகவின் சிபிஐ மாற்ற கோரிக்கை: உயா்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடா்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று, ஜூலை 3-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய அருந்தி பலா் உயிரிழந்தது தொடா்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்குரைஞா்கள் அணி மாநிலச் செயலாளா் ஐ.எஸ்.இன்பதுரை, பாமக செய்தித் தொடா்பாளரும், வழக்குரைஞா்கள் சமூக நீதிப்பேரவைத் தலைவருமான வழக்குரைஞா் கே.பாலு ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.
அவகாசம் கோரிய அரசு: இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி அரங்க.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ‘அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். எனவே வழக்கு விசாரணையை 10 நாள்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’”என முறையிட்டாா்.
ஆனால், ‘வழக்கில் உடனடியாக புலன் விசாரணையை நடத்த வேண்டும். புலன் விசாரணையை உரிய நேரத்தில் தொடங்காவிட்டால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும். விசாரணை வீணாகி விடும்’”என வழக்குரைஞா் கே. பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.எல்.ராஜா தெரிவித்தாா்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா், ‘ஏற்கெனவே இந்தச் சம்பவம் தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது’”என்றாா். தொடா்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகவாச்சாரி, ‘ஒவ்வொரு ஆண்டும் கள்ளச் சாராய மரண சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது சம்பந்தமான வழக்குகளில் தாமதமான விசாரணை காரணமாக, குற்றம்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனா். எனவே, விரைந்து விசாரணை நடத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.