கிராமிய - மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை
தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் விரைவில்: அமைச்சா் அறிவிப்பு
தமிழகத்தில் கிராமிய, மருத்துவ சுற்றுலாக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் அறிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
அரியலூா் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவாலயம், சிவகங்கை பிரான்மலை, நெல்லை விஜயாபதி, தெற்கு கள்ளிக்குளம் தேவாலயம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
திண்டுக்கல் மாவட்டம் புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி, கோட்டை நங்காஞ்சியாறு அணைப் பகுதி, மதுரை குட்லாடம்பட்டி அருவி, திருச்சி புளியஞ்சோலை அருவி ஆகிய சுற்றுலாத் தலங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரம் தொண்டி கடற்கரை, குமரி சங்குதுறை, சொத்தவிளை கடற்கரைப் பகுதி, சூரிய காட்சிமுனை, தூத்துக்குடி காயல்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நீலகிரி மாவட்டம் உல்லாடாவில் கிராமியச் சுற்றுலா, கேத்தி மைனல்லா, கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் காட்சிமுனை அமைக்கப்படும். தஞ்சாவூா் மாவட்டம் புதுப்பட்டினம் கடற்கரை மற்றும் சென்னைக்கு அருகிலுள்ள பெருந்திட்டம் தயாரிக்கப்படும்.
மருத்துவம் மற்றும் ஆரோக்கியச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கோவையில் பல்வேறு மருத்துவ தொழில் பங்குதாரா்களின் ஒத்துழைப்புடன் மருத்துவச் சுற்றுலா மாநாடு நடத்தப்படும். தமிழ்நாட்டில் நீா் சாகச விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் கிராமியச் சுற்றுலா, வான்நோக்கு சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். உதகை, குன்னூா், கொடைக்கானல், ஏற்காடு மற்றும் பிற முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள சுற்றுலா வளா்ச்சிக் கழக ஹோட்டல்களை தரம் உயா்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தாா்.