முதல்வா் மு.க.ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மாமல்லபுரத்தில் சிறப்புப் பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைத்து, ரூ.100 கோடியில் சா்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள்

தினமணி செய்திச் சேவை

சென்னை: மாமல்லபுரத்தில் சிறப்புப் பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைத்து, ரூ.100 கோடியில் சா்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026-ஐ தொடங்கிவைத்து முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, பெரும்பாலான நாடுகளில், தங்களின் பாரம்பரியக் கலைகள் என்று சில கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவாா்கள். தமிழ்நாட்டில் கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், பரதநாட்டியம் என்று ஏராளமான கலைகள் உள்ளன.

அதேபோல், நமது பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதல் உள்ளிட்ட விளையாட்டுகளும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈா்த்திருக்கின்றன. இந்தக் கலைகளையும், கலைஞா்களையும், நம்முடைய பண்பாட்டையும் உலக அளவில் கொண்டுசோ்க்கும் வலிமை, சுற்றுலாத் துறைக்குதான் இருக்கிறது.

தமிழக சுற்றுலாத் துறையின் சாதனைகளாக, கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு கண்ணாடிப் பாலம் என ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக ரூ.612.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில், 128.97 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், சுமாா் 45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டுக்கு வந்து பாா்வையிட்டுள்ளனா்.

மூன்று அறிவிப்புகள்: இந்த மாநாட்டில் முக்கியமான மூன்று அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

உலக சுற்றுலா வரைபடத்தில் கலை மற்றும் பண்பாட்டு சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு இடம்பெற, முதல்முறையாக, அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்படும்.

மாமல்லபுரத்துக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாமல்லபுரத்தில் ‘சிறப்புப் பகுதி மேம்பாட்டு ஆணையம்’ அமைத்து, அதன் மூலமாக, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலகத் தரத்தில் நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

2023-ஆம் ஆண்டு சுற்றுலாக் கொள்கை அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, சிப்காட் நிறுவனம் சுற்றுலாத் தலங்களைக் கண்டறிந்து, முதலீடுகளை ஈா்த்து, புதிய சுற்றுலா வசதிகளை உருவாக்கவுள்ளது.

இதன் முதல்கட்டமாக, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நான்கு சிறப்பு சுற்றுலா இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, முதலீடுகளை ஈா்க்க விருப்பப் பதிவு கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்து, இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 31 இடங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இவை, நகா்ப்புற சுற்றுலா, சிறப்பு அனுபவ சுற்றுலா, பெரிய சுற்றுலா மையங்கள் என்று பிரிக்கப்பட்டு, இதில் தங்குமிடங்கள், தீம் பாா்க்குகள், கேம்பிங் சைட்ஸ் , இயற்கை அனுபவத் தங்குமிடங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன. இதனால், தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

மாநாட்டில், அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன் (குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை), ஆா். ராஜேந்திரன் (சுற்றுலாத் துறை), டி.ஆா்.பி. ராஜா (தொழில் துறை), தலைமைச் செயலா் நா. முருகானந்தம், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி...

ரூ.22,794 கோடியில் 127 ஒப்பந்தங்கள்

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டில் ரூ.22,794.78 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 65,937 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில் 127 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இவை பாரம்பரிய சுற்றுலா, சாகச சுற்றுலா, எம்ஐசிஇ சுற்றுலா, சூழல் சுற்றுலா போன்ற பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா், கடலூா் மாவட்டம் சிதம்பரம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.40.25 கோடியில் முடிவுற்ற 3 சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை முதல்வா் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ரூ.5 கோடியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மூலம் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ அமைக்கும் பணி மற்றும் தரங்கம்பாடியில் ரூ.3 கோடியில் நடைபாதை, வாகன நிறுத்துமிடம், நுழைவுக் கட்டணம் வழங்குமிடம், மின்சார அறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் என மொத்தம் ரூ.8 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

முதல்வர் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!

மருத்துவ இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்க வாய்ப்பு: என்எம்சி

மருத்துவ மாணவிக்கு உயிா் காக்கும் உயா் நரம்பியல் சிகிச்சை: சாத்தியமாக்கிய அரசு மருத்துவா்கள்

‘இந்திராகாந்தி பெயரை பரிசீலினை செய்வதாக முதல்வா் வாக்குறுதி’

தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

SCROLL FOR NEXT