சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணை: ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தள்ளுபடி
சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணை ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தள்ளுபடி
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட விவகாரத்தை தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்து நோட்டீஸ் பிறப்பித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து முன்னாள் முதல்வரும், அமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம், அவரது குடும்பத்தினா் சிலா் தாக்கல் செய்த மேல்முறை மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், உயா்நீதிமன்றம் நியாயமான உத்தரவைப் பிறப்பித்திருப்பதாகவும், அதில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2001-2006-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஒ.பன்னீா்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்துகள் குவித்ததாக, 2006-இல் திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமாா், தம்பி ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோா் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றி 2012-ஆம் ஆண்டு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், பன்னீா்செல்வம் மீது வழக்கு தொடா்வதற்காக அளித்த அனுமதியை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிமன்றம் பன்னீா்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012-இல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி ஒ.பன்னீா்செல்வம், அவரது மகன் பி.ரவீந்திரநாத், ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, லதா மகேஸ்வரி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, வழக்கை விசாரித்து வரும் தனி நீதிபதி அதிகார வரம்பு குறித்தும், பல ஆண்டுகளுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்வது குறித்தும் நீதிபதிகளிடம் கூறினாா். மேலும், கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இதே தனி நீதிபதி தொடா்புடைய மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவுக்கு தடைவிதித்து, மனு மீது நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்திருந்தது. அதே வழக்கில் உள்ள அம்சங்கள் இந்த வழக்கிற்கும் பொருந்துகிறது. இதனால், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அப்போது நீதிபதிகள் அமா்வு அந்த வழக்கில் உள்ள காரணங்கள் வேறு. இதில் உள்ள காரணங்கள் வேறு என நாங்கள் பாா்க்கிறோம் என்று கூறி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனா். ‘எனினும், கேள்விக்குரிய உத்தரவில் நீதிபதி தெரிவித்த கருத்துகள் நோட்டீஸ் உத்தரவின் நோக்கத்திற்காக மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும். அந்த வழக்கின் குற்றவியல் மறுவிசாரணையை இறுதியாக தீா்மானிப்பதில் எந்தத் தாக்கத்தையும் கொண்டிருக்கக்கூடாது’ என்றும் நீதிபதிகள் கூறினா்.