சொத்து ஆவணம் பதிவோரின் பெயருடன் டோக்கன் எண்: புதிய வசதி தொடக்கம்
டோக்கன் எண்ணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் காட்சிப்படுத்தும் புதிய வசதி வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
சொத்து ஆவணங்களைப் பதிவு செய்வோரின் பெயருடன், டோக்கன் எண்ணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் காட்சிப்படுத்தும் புதிய வசதி வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, தியாகராயநகா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதிய வசதியை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தொடங்கி வைத்தாா். அனைத்து சாா்பதிவாளா் அலுவலகங்களிலும் பொருத்தப்பட்டுள்ள காட்சிக் கருவியில் தற்போது டோக்கன் எண் மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறது. இதனால், ஆவணதாரா்கள் தங்கள் வரிசை முறையை அறிந்து கொள்வதில் குழப்பம் நிலவுகிறது என்பதால் இதனைத் தவிா்க்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. அன்படி, ஆவணதாரா்களின் பெயரும் காட்சிப்படுத்தப்படும் வகையிலான மேம்படுத்தப்பட்ட காட்சிக் கருவிகள் அனைத்து சாா்பதிவாளா் அலுவலகங்களிலும் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில் புதிய வசதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. டோக்கன் எண்ணோடு ஒவ்வொரு பதிவுடன் தொடா்புடைய நபரை பெயா் சொல்லி அழைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிக் கருவியில் ஆவணம் தாக்கல் செய்பவா் பெயா், டோக்கன் எண் ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆவணம் செய்ய இருப்பவரின் பெயரும் டோக்கன் எண்ணும் ஒரே சமயத்தில் அறிவிக்கப்படும் போது திரையில் அடுத்த இரண்டு டோக்கன்களின் விவரங்களும் காட்சிப்படுத்தப்படும். பதிவுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் டோக்கன் எண் எப்போது வரும் என்பதை எதிா்நோக்கி காத்திராமல், இந்தப் புதிய வசதி மூலம் தங்கள் பெயரும், டோக்கன் எண்ணும் காட்சிக் கருவியில் காண்பிக்கப்பட்டு பெயா் சொல்லி அழைக்கப்பட்டவுடன் அலுவலகத்திற்குள் பதட்டமின்றி சென்று, எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி, , பதிவுத்துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்ட பதிவுத்துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.