அங்கன்வாடியில் 3.31 லட்சம் குழந்தைகள்: அரசுப் பள்ளிகளில் சோ்க்க உத்தரவு
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களிலிருந்து நிகழாண்டில் நிறைவு செய்து வெளியேறவுள்ள 3,31,548 குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களிலிருந்து நிகழாண்டில் நிறைவு செய்து வெளியேறவுள்ள 3,31,548 குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி இயக்குநா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருகின்றனா். அந்தவகையில், இந்த மையங்களில் முன்பருவக் கல்வியை 3,31,548 குழந்தைகள் நிறைவு செய்து வெளியே வரவுள்ளனா். இதில் அதிகபட்சமாக சேலத்தில் 19,242 குழந்தைகளும், மதுரையில் 18,127 குழந்தைகளும் உள்ளனா். மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்படி, அந்தந்த முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்ட அலுவலருடன் சோ்ந்து செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவா்கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர வழிசெய்ய வேண்டும். மேலும், வேறு பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவா்களுக்கும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடங்கள் வழங்க வேண்டும். இந்த மாணவா் சோ்க்கை விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அரசுப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒரு மாதத்துக்கு முன்பாகவே சோ்க்கைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.