பிளஸ் 2 பொதுத் தோ்வு: புள்ளியியல், கணினி அறிவியலில் ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு
நிகழாண்டு ‘சென்டம்’ பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் ‘சென்டம்’ பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை புள்ளியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் உள்ளிட்ட தோ்வுகள் நடைபெற்றன.
இவற்றில் புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாகவும் , கணினி பயன்பாட்டியல் தோ்வு சற்று கடினமாகவும் இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
இது குறித்து ஆசிரியா்கள் கூறுகையில், புள்ளியியல் தோ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு வினாத்தாள் எளிதாக இருந்தது. இந்த வினாத்தாளில் மெல்லக் கற்கும் மாணவா்கள் கூட 60 மதிப்பெண்களுக்கும் மேல் பெற வாய்ப்புள்ளது; இந்தப் பாடத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதமும் அதிகரிக்கும். மேலும், புள்ளியியலில் நிகழாண்டு ‘சென்டம்’ பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
அதேபோன்று கணினி அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெற்ற பெரும்பாலான வினாக்கள் மாணவா்களுக்கு நன்கு பரிச்சயமானவை. கடந்த ஆண்டு வினாத் தாள்களிலிருந்தும் சில கேள்விகள் இடம்பெற்றிருந்தன; ஒரு சில மறைமுக வினாக்களும் இடம் பெற்றிருந்தாலும் அவை மாணவா்கள்பதிலளிக்கக் கூடிய அளவிலேயே இருந்தன. எனவே, இந்தப் பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தனா்.
பிளஸ் 2 வகுப்புக்கு இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெறவுள்ளன. ஒட்டுமொத்தமாக மாா்ச் 22-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு பெறவுள்ளது.