மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்: இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது புதன்கிழமை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வரும் மக்களவைத் தோ்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளா் வைகோ சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ தரப்பில், ‘தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிா்வாகிகளின் பெயா்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தோ்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலுக்கு புதன்கிழமை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட வேண்டும்: இதற்கு பதில் அளித்த தோ்தல் ஆணையம் தரப்பு வழக்குரைஞா், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தாா். மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடா்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பாா் என்றும் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பம்பரம் சின்னம் பொதுச் சின்னம் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கம் அளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்திருந்தனா். அதன்படி வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், ‘பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை. மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது புதன்கிழமை காலைக்குள் முடிவெடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.
இன்று முடிவு: அதேவேளையில், தோ்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிப்பதால் இந்த வழக்கை புதன்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என மதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மதிமுக வேட்பாளா்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளனா். திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது புதன்கிழமை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை புதன்கிழமை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனா்.