ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா்  
தமிழ்நாடு

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் தரிசனம்

DIN

நீடாமங்கலம்: குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இன்று (மே 1ம் தேதி) மாலை 5.19 க்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில், வலங்கைமான் வட்டத்தில், ஆலங்குடி என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98 வது தலமாக விளங்குகிறது இத்திருத்தலம். திருவாருர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருபரிகாரஸ்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.

பார்க்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்ததால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.

இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது. அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த இடுக்கண்களை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் உண்டாயிற்று. அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. அம்மை திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமண மங்கலம் எனப் பெயர் வழங்கப்பெறுகிறது. மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்கபெருமானுக்கு பரிவாரத்தலமாக விளங்குகிறது.

பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மானிக்கப்பட்டதாகும் இத்திருக்கோயில்.

குருபெயர்ச்சி விழா, வரலாற்றுச்சிறப்புமிக்க இக்கோயிலில் வருடம் தோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் அருள்மிகு குருபகவான் மே 1 ம் தேதி புதன்கிழமை மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

இதனை முன்னிட்டு வழக்கம் போல் குருபெயர்ச்சி விழா கோயிலில் நடைபெற்றது. குருபெயர்ச்சியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு புனிதநீர் நிரப்பப்பட்ட 108 கலசங்களுக்கு சிறப்பு யாகமும், அதனைத் தொடர்ந்து குருபகவானுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது.

குருபெயர்ச்சி நாளான புதன்கிழமை அதிகாலை சிறப்பு குருபரிகார ஹோமம் அதனைதொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசத்துடன் சர்வாஅலங்காரம் செய்யப்பட்டது . கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி அம்மன்,வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் ஆகிய சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவ தட்சிணாமூர்த்திக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதிகாலை முதல் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்து சென்றனர். மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியின் போது குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

அனைத்து ராசிக்காரர்களும் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் அரசின் பல்வேறு துறைகளும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் பெண் போலீசார் உள்பட எராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை விழா ஏப்ரல் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை முதல் கட்டமாக நடந்து முடிந்தது குருப்பெயர்ச்சிக்குப்பின் மீண்டும் மே மாதம் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் நடைபெறவுள்ளது. லட்சார்ச்சனை காலை 9.30 முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடைபெறும்.

ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சார்ச்சனை கட்டணம் 400 ரூபாயாகும். லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினாலான 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.

லட்சார்ச்சனையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர், ராசி ஆகிய விபரங்களுடன் தொகையினை மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட்டாக திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி அஞ்சல் மூலமாக பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம். டிமாண்ட் எடுப்போர் உதவிஆணையர்/செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டியூனியன் வங்கி (திருவாரூர் மாவட்டம்) ஆலங்குடி -612801 கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும். காசோலைகள் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆலங்குடிக்கு கூரியர் வசதி இல்லாததால் அஞ்சல் மூலமாக விபரங்களை அனுப்ப வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் விபரங்களை https://www.alangudiapathsagayeeswarar.hrce.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் தெரிந்துகொள்ளலாம். விழா ஏற்பாடுகளை அறநிலைய துணை ஆணையர், கோயில் தக்கார் க.ராமு, துணை ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் எம்.சூரியநாராயணன், கோயில் கண்காணிப்பாளர் தா.அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT