முகப்பு
தமிழ்நாடு

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

Updated On : 8 மே, 2024 at 7:46 AM
கே.பி. ஜெயக்குமார்
பகிர்:

சென்னை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில், தேடப்பட்டு வரும் முதல் நபர் ஆனந்த் ராஜா மும்பையிலிருந்து நெல்லை திரும்பியிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெயக்குமார் மரணம் தொடர்பான செய்திகள் வெளியானபோது, நெல்லையைச் சேர்ந்த ஆனந்த் ராஜா நெல்லையிலிருந்து கிளம்பி மும்பை சென்றிருப்பதாகவும், அங்கு ஒரு சில நாள்கள் தங்கியிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மும்பையிலிருந்து தற்போது நெல்லை திரும்பியிருக்கும் ஆனந்த் ராஜா, நெல்லை காவல்துறை டிஐஜியை சந்தித்து, தனக்குத் தெரிந்த விவரங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டதாகவும், ஜெயக்குமாரின் மரணத்தைத் தொடர்ந்து அவர் எழுதியதாக கடிதங்கள் வெளியான நிலையில், அதில் தனது பெயர் இருந்ததால், அப்போது நெல்லையில் இருக்க வேண்டாம் என்று வெளியேறியதாகவும் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

மேலும், ஜெயக்குமார் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு, வேறு யாரேனும் கடிதத்தை எழுதியிருக்கலாம் என்றும், இந்தக் கடிதங்களை வெளியே கசிய விட்டவர்கள் யார் என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

தொடர்ந்து, ஜெயக்குமார் மரணத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தனக்கு பல கோடி சொத்துகள் இருக்கும் போது சில லட்சத்துக்காக கொலை செய்வேனா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, மா்ம மரணமடைந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் தனது மருமகன் ஜெபாவுக்கு மரணமடைவதற்கு முன்பு எழுதியதாக காவல்துறையினா் மூலமாக அடுத்தடுத்து இரண்டு கடிதங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் அவரது தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை காவல்துறையினா் கடந்த 4ஆம் தேதி மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். பின்னா் அவரது உடல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் கூறாய்வுகள் வெளியான நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே காவல்தறையினர் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக, ஜெயக்குமாரின் எலும்புகள் டிஎன்ஏ ஆய்வுக்காக மதுரை மண்டல தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அவரது டிஎன்ஏ அறிக்கை கிடைத்துவிடும் என்பதால், உடனடியாக அவரது மகனின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து இறந்தது ஜெயக்குமார்தானா என்பது உறுதி செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், முக்கிய தடயங்கள் கிடைக்காமல் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →