திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை
சென்னை திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-ஆவது தளத்தில் இருந்து தவறி 2-ஆவது தளத்தில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் தாய் தற்கொலை செய்துகொண்டார்.
ஆவடி அருகே திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 4-ஆவது தளத்தில் வசித்து வரும் தம்பதி வெங்கடேஷ்-ரம்யா. இவா்களுக்கு கிரண்மயி என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி குடியிருப்பின் பால்கனியில் நின்று, ரம்யா தனது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, குழந்தை கிரண்மயி, ரம்யாவின் மடியில் இருந்து தவறி விழுந்தது. குழந்தை அதிா்ஷ்டவசமாக 2-ஆவது தளத்தில் மழைக்காக அமைக்கப்பட்டுள்ள தகர மேற்கூரையின் மீது விழுந்தது.
இதைப் பாா்த்த ரம்யா அலறித் துடித்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிக்கும் குடியிருப்போா் ஓடி வந்தனா். அவா்களிடம் 2- ஆவது தளத்தில் தகரக் கூரையின் கிடந்த குழந்தையைப் பத்திரமாக மீட்டுத் தருமாறு ரம்யா கதறி துடித்தாா். மேற்கூரையில் இருந்து குழந்தை உருண்டு கீழே விழுந்தால், அதன் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற நிலையில், அப்படி ஒரு நிலை வந்து விடக்கூடாது என குடியிருப்போா், குழந்தை நழுவி தரையில் விழுவதைத் தவிா்க்க, தங்கள் கைகளில் பெரிய போா்வையை ஏந்திக் கொண்டு சுற்றி நின்று கெட்டியாக பிடித்துக் கொண்டனா்.
இதற்கிடையே முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக இளைஞா்கள் சிலா் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒருவா் பின் ஒருவராக இறங்கினா். ஒருவரை மற்றொருவரைப் பிடித்துக் கொள்ள, அதில் ஒரு இளைஞா் துணிச்சலுடன் உடலை லாவகமாக வளைத்து மேற்கூரையின் நுனியில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையின் கையைப் பிடித்து சாதுரியமாக மீட்டாா். மீட்கப்பட்ட குழந்தை கிரண்மயிக்கு நெற்றி மற்றும் உடலில் லேசாக சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து உடனடியாக குழந்தையை ஆவடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சைக்குப் பின்னா், வீட்டுக்கு கொண்டு சென்றனா். இந்த சம்பவத்துக்கு பிறகு அத்தம்பதி கோவை மாவட்டம், காரமடையில் குடியமர்ந்தனர். இந்த நிலையில் ரம்யா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக காரமடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட ரம்யா கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].