தமிழ்நாடு

முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயார்! ஜூன் மாதம் திறப்பு விழா!!

முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயாராகியிருக்கும் நிலையில், ஜூன் மாதம் திறப்பு விழா காணவிருக்கிறது.

Vanisri

தமிழகத்துக்கு குறிப்பாக சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் சென்னை மக்களும் விரைவில் மிதக்கும் உணவக் கப்பலில் உணவருந்தி மிகச் சிறந்த அனுபவத்தைப் பெறப்போகிறார்கள்.

செங்கல்பட்டு, முட்டுக்காடு பகுதியில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட மிதக்கும் உணவகக் கப்பல் தயாராக உள்ளதாகவும் திறப்புவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் கொச்சினைச் சேர்ந்த தனியார் நிறுவனமும் இணைந்து, தமிழகத்திலேயே முதல் முறையாக இப்படியொரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளன.

முட்டுக்காடு படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டடுக்கு மிதக்கும் உணவகக் கப்பல் கட்டப்பட்டுள்ளது.

முட்டுக்காடு சுற்றுலா படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில், மிதவை படகுகள், வேகமான இயந்திர படகுகள் உள்ளிட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகமான சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் விதமாக ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு உணவகக் கப்பலுக்கான கட்டுமானப்பணியை கொச்சியை சோ்ந்த ‘கிராண்ட்யூயர் மரைன் இன்டா்நேஷ்னல்’ எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய மிதக்கும் உணவகக் கப்பலின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படவிருப்பதாகவும், வாரம் முழுக்க அனைத்து நாள்களிலும் இது இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன்ஸ் க்ரூஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில் அமைந்துள்ள ஒட்டுமொத்த உணவகமும் குளிர்சாதன வசதி கொண்டது. இன்னும் உணவுகள் மற்றும் அதன் விலைகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இறுதி செய்யவில்லை என்றும், ஆனால், மக்களிடையே தேநீர் விருந்து, மற்றும் இதர கூட்டங்களை நடத்த மக்களிடையே முன்பதிவுகள் வந்துகொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முட்டுக்காடு படகுக் குழாமில், இந்த கப்பலுக்கென சிறப்பு இடம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விருந்தினர்கள் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலுக்குள் கப்பல் சென்று திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தளம், தொலைக்காட்சித் திரை, இசை நிகழ்ச்சி போன்றவற்றுடன் அமைந்துள்ளது. அலுவலக கூட்டங்கள், சிறிய விருந்து அல்லது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றை மக்கள் இங்கே நடத்திக்கொள்ளலாம். இங்கு 100 பேர் வரை இருக்கலாம். இரண்டாவது தளம் உணவு சாப்பிடும் இடமாகவும், பஃபே முறையில் உணவு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச விருந்தினர்கள் பங்கேற்கும் விருந்துகளில் அதற்கேற்ப உணவுகள் மாறும் என்றும் கூறப்படுகிறது.

மீட்புப் படகுகள், தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் காலை 7.30 மணி முதல் இங்கு உணவகம் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. குழுவாகச் சென்று உணவருந்த விரும்பினால் முன்பதிவின் பேரில் செய்துகொடுக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT