ஜெயக்குமார் மர்ம மரணம்: மகனிடம் விசாரணை நடத்தும் சிபிசிஐடி
ஜெயக்குமார் மர்ம மரணமடைந்த விவகாரத்தில் அவரது மகனிடம் விசாரணை நடத்தும் சிபிசிஐடி..
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமார் மா்மமான முறையில் மரணமடைந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது மகனிடமிருந்து விசாரணை தொடங்கியிருக்கிறது.
ஜெயக்குமார் மர்ம மரண விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் குறித்து எந்த துப்பும் துலங்காத நிலையில், ஆரம்பக்கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களிடம்தான் விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்திலும் எந்த தடயமும் காவல்துறைக்குக் கிடைக்காதது விசாரணையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிசிஐடி அதிகாரிகள் இன்று ஜெயக்குமார் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மகனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும்,தோட்ட ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் மா்மமாக உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தில் அப்பிரிவு போலீஸாா் ஆய்வு நடத்தினா்.
உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தனது தோட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி எரிந்த நிலையில் கே.பி.கே. ஜெயக்குமாா் சடலமாக மீட்கப்பட்டாா். இதை, சந்தேக மரண பிரிவின் கீழ் உவரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினா்.
அப்போது, ஜெயக்குமாா் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கெனவே எழுதி வைத்திருந்த 2 கடிதங்கள் போலீஸாருக்கு கிடைத்தன. ‘மரண வாக்குமூலம்’ என்ற பெயரில் அவா் எழுதியிருந்த ஒரு கடிதத்தில், தனக்கு ஏதேனும் நோ்ந்தால் இவா்கள்தான் காரணம் என்று 32 பேரின் பெயா்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
தனிப்படை போலீஸாா் ஜெயக்குமாா் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவா் தங்கபாலு, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா்.மனோகரன் உள்பட 32 பேரிடமும் விசாரணை நடத்தினா். எனினும், இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல் துறை டிஜிபி சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து சிபிசிஐடி போலீஸாா், கரைசுத்துபுதூரில் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். சம்பவ இடத்தை தோண்டிப் பார்த்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.