சென்னை விமான நிலையத்தில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம்!
சென்னை விமான நிலையத்தில் முகத்தை அடையாளம் காணும் வசதி: அதனாலென்ன?
சென்னை: நாட்டில் டிஜியாத்ரா வசதி பயன்பாட்டில் இருக்கும் 14 விமான நிலையங்களில் சென்னை சர்வதேச விமான நிலையம் ஒன்றாக மாறவிருப்பதாக டிஜியாத்ரா அறக்கட்டளையின் மூத்த செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜூன் மாதம் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதி அறிமுகமாகிறது.
இந்த திட்டத்தின் மூலம், சென்னை விமான நிலையத்தில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். இதனால், விமான நிலையத்துக்குள் பாதுகாப்பு சோதனை மற்றும் பயணிகளின் அடையாளத்தை சோதித்தல் உள்ளிட்டவற்றின் நேரம் குறையும்.
ஏற்கனவே, டிஜியாத்ரா, சென்னை விமான நிலையத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதியே அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு ஒப்புதல் தர தாமதமானதால், அப்போது அறிமுகப்படுத்தப்படவில்லை.
பல்வேறு விமான நிலையங்களிலும் கடந்த ஆண்டு முதல் இந்த டிஜியாத்ரா வசதி கொண்டுவரப்பட்டதால், பல லட்சம் விமானப் பயணிகள் அதன் பயனை அடைந்துள்ளனர். ஏற்கனவே 14 விமான நிலையங்களில் இந்த வசதி உள்ளது. அடுத்த மாதம் மேலும் 14 விமான நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்குவதில், பல்வேறு அமைச்சகங்களின் பணியும் இருப்பதால், ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் தனித்தனி ஒப்புதல் பெறுவதால், சென்னை விமான நிலையத்துக்கு இந்த வசதி வரதாமதமாகியிருக்கிறது. ஆனால், அடுத்த மாதம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும் விமான பயணிகளின் காத்திருப்பு நேரம் குறையும்.
தேர்வு செய்யப்பட்ட விமான நிலையங்களில் 50 சதவீத பயணிகள் இந்த டிஜியாத்ராவை பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.