விருதுநகர்: கடந்த ஆண்டைக் காட்டிலும், தீபாவளி பண்டிகைக் காலத்தில் இந்த ஆண்டு சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், வட மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பட்டாசு விற்பனை மந்தமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தீபாவளி நாளில், குறிப்பிட்ட நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல நாள் முழுக்க வெடிச் சப்தம் கேட்டது போல அல்லாமல், காலை மற்றும் மாலையில் அதிகம் பேர் பட்டாசுகளை வெடித்தனர்.
குறிப்பாக, பட்டாசுகளில் வான வேடிக்கைகள்தான் இந்த ஆண்டும் அதிகம் வெடிக்கப்பட்டது.
அது போல, கடந்த ஆண்டு தீபாவளியின்போது, பட்டாசு விற்பனை நடந்ததைக் காட்டிலும் இந்த ஆண்டு 5 முதல் 7 சதவீதம் அதிகம் விற்பனையாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய பட்டாசு உற்பத்திக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி. கண்ணன் கூறுகையில், ஆண்டுதோறும், பண்டிகைக் காலங்களில் பட்டாசு விற்பனை சராசரியாக உயர்ந்துகொண்டுதானிருக்கிறது. அதிலும் குறிப்பாக, வான வேடிக்கைகளின் புதிய புதிய ரகங்களை மக்கள் அதிகம் வாங்கிச் செல்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான மொத்த விற்பனையாளர்கள் நேரடியாக வந்தும், ஆன்லைன் மூலமும் ஏராளமான பட்டாசுகளை வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
பொட்டாசியம் போன்ற பட்டாசுகளின் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு காரணமாக பட்டாசுகளின் விலையும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, சட்டத்துக்கு விரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலைகள் முடப்பட்டதால், சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை அதிகரித்தே காணப்பட்டது என்கிறார்.
பட்டாசுத் தயாரிப்பு ஆலைகள் சொல்வதென்ன?
சரவெடிகளுக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதால், கிட்டத்தட்ட 40 சதவீத பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது என்கிறார்கள்.
பட்டாசு கடைளைத் திறக்கவும் தாமதமாகவே அனுமதி வழங்கப்பட்டது. சில மாவட்டங்களில் எல்லாம் ஒரு வாரத்துக்கு முன்புதான் அனுமதி கிடைத்தது. குறைந்தது 20 நாள்களுக்கு முன்பே அனுமதி கிடைத்தால், நிச்சயம் பட்டாசு விற்பனையில் சாதனை படைக்கலாம் என்கிறார்கள் சில்லறை விற்பனையாளர்கள்.
இதனால், கடைகளுக்கு வந்து பட்டாசுகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மந்தமாகவே இருந்ததாகவும், கிட்டத்தட்ட 20 சதவீத பட்டாசுகள், கடைகளில் விற்பனையாகாமல் தேங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சில வட மாவட்டங்களில், பட்டாசு சில்லறை விற்பனை ஒருசில சதவீதம் சரிவைக் கண்டிருப்பதாகவும், முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
நிரந்தர கடை உரிமையாளர்களுக்கு சிக்கலில்லை, ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்கு அனுமதி பெற்று கடைகள் வைத்தவர்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் சில்லறை வியாபாரி.
இந்த ஆண்டு 40 லட்சம் வரை விற்பனையாகும் என கணக்கிட்டிருந்தால் ரூ.12 லட்சம் வரைதான் விற்பனையானது. மாதக் கடைசியில் தீபாவளி வந்ததும் இதற்குக் காரணம் என்கிறார்கள் சில்லறை விற்பனையாளர்கள். கடந்த ஆண்டு ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கியவர்களுக்குக் கிடைத்த பட்டாசுகளை விட, விலை ஏற்றத்தால் இந்த ஆண்டு குறைவான பட்டாசுகளே கிடைத்திருக்கும். அதுபோல, கடந்த ஆண்டு ரூ.1000க்கு பட்டாசு வாங்கியவர்கள் இந்த ஆண்டு ரூ.500 முதல் ரூ.800க்குத்தான் வாங்கியிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.