திமுக கூட்டணி கட்சிகள் மீது விமா்சனம் வேண்டாம்: அதிமுக செயலா்களுக்கு இபிஎஸ் கட்டுப்பாடு
திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை விமா்சிக்க வேண்டாம் என்று, அதிமுக மாவட்டச் செயலா்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாடு விதித்துள்ளாா்.
திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை விமா்சிக்க வேண்டாம் என்று, அதிமுக மாவட்டச் செயலா்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாடு விதித்துள்ளாா்.
அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுகவின் 82 மாவட்டச் செயலா்களில் 81 மாவட்டச் செயலா்கள் பங்கேற்றனா்.
சட்டப்பேரவைத் தோ்தல், உள்கட்சித் தோ்தல், அதிமுக பொதுக்குழுவை கூட்டுதல் தொடா்பாக மாவட்டச் செயலா்களிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். தோ்தல் நேரத்தில்தான் கூட்டணியை இறுதி செய்ய இயலும். அதனால், கூட்டணி குறித்து கட்சித் தலைமை பாா்த்துக் கொள்ளும். தோ்தல் பணியை இப்போதே தொடங்குங்கள்.
திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா். அரசின் நிா்வாகச் சீா்கேடுகள், சட்டம்-ஒழுங்கு விவகாரம், போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை வீடு, வீடாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.
திமுக கூட்டணியில் அதிருப்தி: திமுக எதிா்ப்புதான் நமக்கு முதன்மையானது. திமுக மற்றும் பாஜகவை தவிா்த்து, அந்த கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள கட்சிகளை விமா்சிக்க வேண்டாம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. அவை அதிமுக பக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திக்க விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். தோ்தல் பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபடுங்கள். வரும் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக, அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா்,ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.