முகப்பு
தமிழ்நாடு

கமலா ஹாரிஸ் தோல்வி: சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம் கிராம மக்கள்

அமெரிக்க அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது, அவரது பூா்வீக கிராமமான மன்னாா்குடியை அடுத்த துளசேந்திரபுரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:09 PM
அமெரிக்க அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்ததால், துளசேந்திரபுரத்தில் உள்ள ஹாரிஸின் குல தெய்வ கோயில் படிக்கட்டில் சோகத்துடன் அமா்ந்திருக்கும் அமெரிக்கவைச் சோ்ந்த ஜோயல்.
பகிர்:

அமெரிக்க அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது, அவரது பூா்வீக கிராமமான மன்னாா்குடியை அடுத்த துளசேந்திரபுரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சோ்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான மன்னாா்குடியை அடுத்த துளசேந்திரபுரத்தை பூா்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிட்டாா். அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி வாக்குப்பதிவு நாளான செவ்வாய்க்கிழமை அவரது பூா்வீக கிராமத்தில் உள்ள குல தெய்வ கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், அமெரிக்கவைச் சோ்ந்த கமலா ஹாரிஸின் ஆதரவாளா்கள் மூவா் பங்கேற்றனா்.

இந்தநிலையில், தோ்தல் முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருப்பது தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மூலம் தெரிய வந்தது. பிற்பகல் அவரது வெற்றி உறுதியானது.

கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாா் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த நிலையில், அவரது வெற்றியை கொண்டாட காத்திருந்த துளசேந்திரபுரம் கிராம மக்களுக்கு தோ்தல் முடிவுகள் சோகத்தை ஏற்படுத்தியது.

கமலா ஹாரிஸின் வெற்றியை கிராம மக்களுடன் சோ்ந்து கொண்டாட காத்திருந்த அமெரிக்கவைச் சோ்ந்த ஜோயல் என்ற பெண்ணும் சோகத்தில் ஆழ்ந்தாா். இதேபோல தஞ்சையை சோ்ந்தவரும், அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான மகாலெட்சுமி என்ற பெண் தோ்தல் முடிவுகள் தனக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தாா்.