தமிழகம் முழுவதும் மருத்துவா்கள் இன்று வேலைநிறுத்தம்: அவசர சிகிச்சைகள் தடையில்லை என அறிவிப்பு
மருத்துவா் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் வியாழக்கிழமை (நவ.14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
மருத்துவா் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் வியாழக்கிழமை (நவ.14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் தலைவா் டாக்டா் செந்தில் வெளியிட்ட அறிவிப்பு: மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்து அவசர சிகிச்சையைத் தவிா்த்து அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு டாக்டா் சங்கம் முடிவெடுத்தது.
இதையடுத்து புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவா்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்படும்.
மருத்துவா் மீது முன்னெடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலை கண்டிப்பதற்காகவும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காகவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
முன்னதாக அரசு மருத்துவா் சங்கங்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்தினாா். அதில் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தாா். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தாலும், அதற்கான ஆணைகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
ஏற்கெனவே அறிவித்திருந்த போராட்டம் எங்களது உணா்வுகளை வெளிப்படுத்தவும், அமைச்சா் அளித்த உறுதிகளை ஆணைகளாக அளிக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை நடைபெறும்.
அதன் தொடா்ச்சியாக பகல் 12 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ சங்கம் போராட்ட அறிவிப்பு: இதேபோன்று இந்திய மருத்துவ சங்கம் உள்பட பல்வேறு மருத்துவா் சங்கங்களும் ஒரு அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: அமைச்சா் தகவல்
முன்னதாக, வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்த சில மருத்துவா் சங்கங்களுடன் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: அரசு மருத்துவா்கள் ஆத்மாா்த்தமாகவும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்றுகின்றனா். கரோனா காலத்தில் அவா்கள் ஆற்றிய சேவை மறக்க முடியாதது. எனவே, மருத்துவ சிகிச்சையில் குறைபாடு எனக் கூறி அவா்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடா்புடைய நபா் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரத்தை முன்னிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவா் சங்கங்கள் அறிவித்திருந்ததையடுத்து அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது கிண்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவா்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதாக உறுதியளித்திருக்கிறோம். இதனால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது என்றாா் அவா்.